ஆலங்குலம் தொகுதியில் வேட்புமனுதாக்கல் செய்திருந்த ஹரிநாடார் மற்றும் ராக்கெட் ராஜாவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கிடையில் நேற்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் இன்று (ஏப்ரல் 7) பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்நிலையில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த ராக்கெட் ராஜா மற்றும் ஹரி நாடார் ஆகியோரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் இருவரும் இணைந்து தேர்தலை எதிர்கொண்டனர். அப்போது பனங்காட்டுப்படை கட்சி சார்பில் ஹரி நாடார் போட்டியிட்டார். பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 2024-ஆம் ஆண்டு சத்திரிய சான்றோர் படை என்ற புதிய கட்சியை ஹரி நாடார் தொடங்கினார்.
தற்போது குற்ற வழக்குகளில் சிக்கி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரி நாடார், சிறையில் இருந்தபடியே முகவர் மூலம் ஆலங்குளம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இன்று நடந்த பரிசீலனையின்போது, சிறையில் இருந்து முகவர் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்தது செல்லாது எனக் கூறி தேர்தல் நடத்தும் அலுவலர் அவரது மனுவை நிராகரித்தார்.
அதே தொகுதியில் ராக்கெட் ராஜா தாக்கல் செய்த வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது. அவரை முன்மொழிந்தவர்களில் ஒருவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் பிழையுடன் இருந்ததால் மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
முன்னதாக கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஹரி நாடார் 37,726 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
