உண்மையான காங்கிரஸ் நமது பக்கம் – விஜய்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

சில பல கோடிகளைக் கொடுத்து தமிழக காங்கிரஸை ஸ்டாலின் சார் பையில் போட்டுக் கொண்டார். ஆனால் உண்மையான காங்கிரஸ் நமது பக்கம் நிற்கிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய், திருநெல்வேலி பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி, உங்கள் தோழன், உங்கள் நண்பன், உங்கள் விஜய்.. உங்களைத் தேடி வந்திருக்கிறேன்.

ADVERTISEMENT

இந்நேரம் திமுகவின் கையில் அந்த முழு அதிகாரமும் இருந்திருந்தால், ஸ்டாலின் சார் கையில் முழு அதிகாரமும் இருந்திருந்தால், கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது. ஏதாவது ஒரு முட்டுக்கட்டையைப் போட்டு, நம்மை வரவிடாமல் செய்திருப்பார். ஆனால் இப்போதுதான் அவர் அதிகாரம் இல்லாத ஒரு முதல்வராக இருக்கிறார் என்பதால், கொஞ்சம் எளிதாக வர முடிந்தது என்று நினைக்கிறேன்.

திமுக அரசு நமக்கு எவ்வளவு பிரச்சினைகள், நெருக்கடிகள், அவதூறுகள் செய்கிறார்கள். அவர்களைத் தாண்டி பலரும் பல்வேறு அவதூறுகளைப் பரப்பினார்கள். இந்த திமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் வெளியில் வேண்டுமானால் தனித்தனியாக இருப்பார்கள். ஆனால் உண்மையில் இரண்டு பேரும் ஒன்றுதான். இவர்கள் இருவருக்கும் ஒரே நோக்கம்தான்.. உங்களுக்காக நல்லது செய்ய, உங்களுக்காக உழைக்க, உங்களுடன் நிற்க இந்த விஜய் வந்து விடக்கூடாது என்பதுதான் அவர்களுடைய நோக்கம்.

ADVERTISEMENT

இந்த விஜய் வந்ததிலிருந்து அவர்கள் ஊழல் எல்லாம் செய்து கொண்டிருந்தார்கள் அல்லவா? அதை எல்லாம் செய்ய முடியாமல் போய்விட்டது. எல்லாவற்றிலும் மண் விழுந்துவிட்டது. அதனால் என்மீது செம கோபத்தில் உள்ளனர்.

அதேபோல், அடுத்து ஆட்சிக்கு வர முடியாத சூழ்நிலையை மக்களாகிய நீங்களே உருவாக்கிவிட்டீர்கள். கூட்டணி உள்ளிட்ட எந்தக் கணக்கும் ஒருவருக்கும் எடுபடவில்லை. கொள்ளையடித்து வைத்துள்ள பணத்தை எல்லாம் வைத்து ‘கல்லாப்பெட்டி கூட்டணி’ என்ற ஒரு கூட்டணியைச் சேர்த்து வைத்திருந்தார். அது எல்லாம் இப்போது கலகலத்து போய் நிற்கிறது. டாப் தனியாக, பாட்டம் தனியாக, ரீப்பர் தனியாக தனியாக நிற்கிறது. எல்லாவற்றையும் ஒட்ட வைத்துக் கொண்டிருக்கிறார்.கூட்டணி கட்சிக்காரர்களே ஒருவருக்கு ஒருவர் ஓட்டுப் போடக்கூட மாட்டார்கள் போல.. அப்படி உள்ளது நிலைமை இந்த திமுக கூட்டணியில்..

ADVERTISEMENT

இவர்களுக்குத்தான் இந்த நிலை என்று பார்த்தால், பாஜக தலைமையில் உள்ள மற்றும் பலரின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. அதனால் மக்களே இந்த திமுகவின் நேரடிக் கூட்டணிக்கும், மறைமுகக் கூட்டணிக்கும் நம்மீது காண்டு.. அந்த காண்டிற்கு ஒரு காரணம் அவர்கள் வீட்டிலேயே, அவர்கள் குடும்பத்திலேயே விசில் சத்தம் பலமாகக் கேட்கிறதாம்.

இரண்டாவது, சில பல கோடிகளைக் கொடுத்து தமிழக காங்கிரஸை ஸ்டாலின் சார் பையில் போட்டுக் கொண்டார். ஆனால் உண்மையான காங்கிரஸ் யார் பக்கம் நிற்கிறது? நமது பக்கம் நிற்கிறது.

சிறுபான்மை மக்களுடன் என்ற திமுகவின் சாயம் வெளுத்துப் போய்விட்டதே. இந்த விஜய் மதச்சார்பற்ற கொள்கையின் உண்மையான ஒரு முகமாக இருக்கிறானே. இந்த சிறுபான்மை மக்கள் வேறு இந்த விஜய் பக்கம்தானே நிற்கிறார்கள் என்று திமுகவிற்கும் பாஜகவிற்கும் என்மீது காண்டோ..காண்டு.

அதற்காக நாம் என்ன செய்ய முடியும்? இந்த 33 வருடமாக ஒவ்வொரு வீட்டிற்குள்ளும், ஒவ்வொவர் மனதிற்குள்ளும் போவதற்கு நான் பட்ட பாடு எனக்குத் தானே தெரியும். நான் முன்பே சொன்னது போல், கட்சியை ஆரம்பித்துவிட்டு ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நான் போகவில்லை. ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் போனதற்குப் பிறகுதான் கட்சியை ஆரம்பித்திருக்கிறேன். இது அரசியல், கட்சி எல்லாவற்றையும் தாண்டி இருக்கும் உறவு. இது பூர்வ ஜென்ம பந்தம். அரசியல் ஆதாயம் தேடுபவர்களுக்கு எல்லாம் என்ன என்றே புரியாது. மற்றவர்களுக்கு வேண்டும் என்றால் எலெக்ஷன்.

ஆனால் இந்த விஜய்க்கும் விஜய் கூட இருப்பவர்களுககும் இது ஒரு எமோஷன். நான் சந்தோஷப்பட்டால் மக்கள் சந்தோஷப்படுகிறார்கள். மக்கள் சந்தோஷப்பட்டால் நான் சந்தோஷப்படுகிறேன். எனக்கு ஒன்று என்றால் மக்களுக்கும் மக்களுக்கு ஒன்று என்றால் எனக்கும் கண்ணு கலங்கும். ” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share