நடிகர் விஜய் பெரம்பூரை தொடரந்து திருச்சி கிழக்கிலும் கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக கடந்த மார்ச் 30-ம் தேதி வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். திருச்சி கிழக்கு தொகுதிக்கு ஏப்ரல் 2-ம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பெரம்பூரில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் விஜய்யின் வயது 52 என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், திருச்சி கிழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 51 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இரண்டு நாட்களுக்குள் வயது குறைந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், பெரம்பூர் தொகுதி வேட்பு மனுவில் எந்தக் குற்ற வழக்கும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பு மனுவில், 2025 மதுரை மாநாட்டின் போது நடந்த மோதல் தொடர்பான ஒரு வழக்கும், மார்ச் 30-ம் தேதி கொளத்தூர் பிரச்சாரத்தின்போது விதிமீறல் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, விஜய் தனது ரூ.6.25 கோடி மதிப்பிலான பிரச்சார வாகனத்தை சொத்துக் கணக்கில் காட்டாதது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், நேற்று பெரம்பூரில் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த விஜய், திருச்சி கிழக்கிலும் கூடுதல் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளார்.
இதன் மூலம் பழைய பிரமாண பத்திரத்தில், விஜயின் சொத் து மதிப்பு ரூ.642 கோடியாக இருந்த நிலையில் தற்போது, அந்த மதிப்பு ரூ. 648 கோடியாக அதிகரித்துள்ளது. 6 கோடி ரூபாய் மதிப்பிலான டாடா கேரவன் வாகனம் ஒன்றை, அசையும் சொத்தாக கணக்கில் காண்பித்துள்ளார். இதேபோல் பெரம்பூரில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் விஜய் வயது 51 என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரம்பூர் மற்றும் மதுரை வழக்குகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.
