சென்னை/புதுடெல்லி:
“மத்திய அரசு வேலை, அதுவும் பள்ளி ஆசிரியர் வேலை என்றால் சும்மாவா?” என்று பெருமையாக நினைக்கும் பட்டதாரிகளுக்கு, இதோ ஒரு ஜாக்பாட் செய்தி. நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா (KVS) மற்றும் நவோதயா வித்யாலயா (NVS) பள்ளிகளில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்ப அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்தம் 14,967 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் பணி மட்டுமல்லாது, அலுவலகப் பணிகளுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட இருப்பதால், இந்த அறிவிப்புத் தேர்வர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
காலியிடங்கள் எவ்வளவு?
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) மற்றும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS) வெளியிட்டுள்ள தகவலின்படி:
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: 9,126 இடங்கள்.
நவோதயா வித்யாலயா பள்ளிகள்: 5,841 இடங்கள்.
யார் யாருக்கு வாய்ப்பு?
இந்த மெகா ஆட்சேர்ப்பில் இரண்டு வகையான பதவிகள் நிரப்பப்பட உள்ளன:
ஆசிரியர் பணியிடங்கள் (13,008):
முதல்வர் (Principal), துணை முதல்வர் (Vice Principal), முதுகலை ஆசிரியர் (PGT), பட்டதாரி ஆசிரியர் (TGT), இடைநிலை ஆசிரியர் (PRT) மற்றும் நூலகர் (Librarian) ஆகிய பதவிகள் இதில் அடங்கும். இதற்கு அந்தந்தப் பாடப்பிரிவில் டிகிரி, பி.எட் மற்றும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (CTET) தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் (1,959):
உதவி ஆணையர், நிர்வாக அதிகாரி, செக்ஷன் ஆபீசர் (ASO), இளநிலை மற்றும் முதுநிலை உதவியாளர் (Junior/Senior Assistant), சுருக்கெழுத்தாளர் (Stenographer), நிதி அதிகாரி மற்றும் இன்ஜினியர் போன்ற நிர்வாகப் பதவிகள் இதில் அடங்கும். 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்தவர்களுக்கு இந்தப் பிரிவில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
கடைசி தேதி எப்போது?
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், kvsangathan.nic.in அல்லது cbse.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: டிசம்பர் 4, 2025.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்களுக்கு வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் கணினி வழித் தேர்வு (CBT) நடைபெறும். இதற்கான ஹால் டிக்கெட் (Admit Card) டிசம்பர் மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்காக நடத்தப்படும் இப்பள்ளிகளில், நாடு முழுவதும் காலிப்பணியிடங்கள் அதிகரித்து வருவதாகப் புகார்கள் எழுந்தன. மேலும், புதிதாக 57 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்தப் புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடைசி தேதி நெருங்கிவிட்டதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து, மத்திய அரசுப் பணியில் சேரும் கனவை நனவாக்கிக் கொள்ளுங்கள்!
