நாமக்கல்லில் சோகம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் விபத்தில் பலி – முதல்வர் நிதியுதவி!

Published On:

| By Kavi

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாணவிகள் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா சக்கராம்பாளையத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி அமுதா.  கூலி வேலை செய்து வருகின்றனர். 

ADVERTISEMENT

 இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்கள் இருந்தனர். 

மூத்த மகள் சுபிதா கலைச்செல்வி (19), ராசிபுரம் அருகே உள்ள திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் பிஎஸ்சி கணிதவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். 

ADVERTISEMENT

இரண்டாவது மகள் நிவேதிதா(16) மூன்றாவது மகள் தனுஸ்ரீ (13)  எலச்சிபாளையம் அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு படித்து வந்தனர். 

இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற தங்கைகளை அழைத்து வருவதற்காக அக்கா சுபிதா, ஸ்கூட்டியில் பள்ளிக்குச் சென்றார். அவருடன் சுபிதாவின் சித்தப்பா ரமேஷ் பாபுவின் மகளான 6ஆம் வகுப்பு மாணவி அபிநயாவும் சென்றார். 

ADVERTISEMENT

பள்ளியிலிருந்து நிவேதிதா, தனுஸ்ரீ இருவரையும் அழைத்துக் கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். மொத்தமாக அந்த மொபட்டில் சுபிதா, நிவேதிதா, தனுஸ்ரீ, அபிநயா என நான்கு பேர் வந்து கொண்டிருந்த நிலையில் சக்கராம்பாளையம் பிரிவு ரோட்டை கடக்கும்போது அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பேருந்து ஒன்று மோதியது. 

இதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளது. இந்த விபத்து குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த முதல்வர் விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இன்று (செப்டம்பர் 4) இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

சாலை விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். 

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள் மற்றும் உறவுக்கார சிறுமி ஒருவர் என நான்கு பேர் உயிரிழந்தது சக்கராம்பாளையம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share