2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? என்கிற முடிவை மாநில குழுக்களின் கூட்டத்தில்தான் முடிவெடுத்து அறிவிப்போம் என்று சிபிஐ, சிபிஎம் கட்சிகள் அறிவித்துள்ளன.
தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த 2 தொகுதிகளில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சிகள் களம் காண்கின்றன. 4 முனை போட்டி நிலவும் நிலையில் 2 தொகுதிகளில் சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.
சென்னையில் சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் இன்று (செப்டம்பர் 12) செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்களது மாநில குழு கூட்டம் கூடி இடைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து முடிவெடுப்போம். தவெகவில் இருந்து ஒருவர் எங்களை தொடர்பு கொண்டு இடைத்தேர்தல் ஆதரவு தொடர்பாக பேச வேண்டும் என்று சொன்னார். அதுபற்றியும் எங்களது மாநில குழுவில் பேசுவோம்” என்றார்.
இதேபோல சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறுகையில், “இடைத் தேர்தல் தொடர்பாக இன்று எமது கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருச்சியில் நாளை மாநில குழு கூட்டம் கூடி இறுதி முடிவை அறிவிக்கும்” என்றார்.
