தூத்துக்குடியிலும் விஜய்யை பார்க்கும் முயற்சியில் அவரது வாகனத்தை பின்தொடர்ந்து சென்றவர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அக்கட்சி சார்பில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விஜய் இன்று (ஏப்ரல் 8) தூத்துக்குடியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து புறப்படும் முன்பு இரண்டு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் பலர் காயமடைந்துள்ளனர்.
விஜய் வந்த வாகனம் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது, ஒரு ரசிகர் விஜய்யிடம் சிலை ஒன்றை கொடுக்க முயன்றார். அப்போது விஜய்யின் வாகனத்தைத் தொடர்ந்து ஓடி வந்த அந்த இளைஞர், சிலையை கொடுத்த கணத்தில் தனியார் பவுன்சர்களால் கண்மூடித்தனமாகத் தள்ளப்பட்டார். இதில் அவர் கீழே விழுந்ததைத் தொடர்ந்து, பின்னால் வந்த பல இளைஞர்கள் அவர்மீது விழுந்தனர். மேலும், இருசக்கர வாகனங்களில் வந்த தொண்டர்கள் அடுத்தடுத்து விழுந்ததால், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விஜய் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அரை மணி நேரத்திற்குள் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த விஜய்யின் வாகனத்தை ரசிகர்கள் பலரும் பின்தொடர்ந்தனர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி அருகே நின்றிருந்த காவல்துறை வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் படுகாயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விஜய்யின் பிரச்சாரங்களின்போது அவரை பார்ப்பதற்காக இருசக்கர வாகனங்களில் அதிக வேகத்தில் பின்தொடர்ந்து சென்று விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது.
விஜய் பிரச்சார கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி வழங்குவதில் கடுமையான விதிமுறைகள் இருப்பதாகவும், ஆளும் திமுக விஜய்யின் பிரச்சாரத்தைத் தடுக்க முயற்சிப்பதாகவும் தவெக நிர்வாகிகள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், விஜய் செல்லும் இடங்களில் தொடர்ந்து இத்தகைய வாகன விபத்துக்கள் ஏற்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
