திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பூஜை செய்ய அனுமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கிறேன் என்று நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது
இந்த வழக்கில் ஏற்கனவே மன்னிப்பு கோரி மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரி இருந்தனர்.
இந்த நிலையில் இவ்வழக்கு மீண்டும் இன்று (மார்ச் 2) விசாரணைக்கு வந்த போது மதுரை ஆட்சியர் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முன் மீண்டும் ஆஜரானார்.
அப்போது அவரது சார்பில், தீபத்தூண் வழக்கில் பொது மன்னிப்பு கோரப்பட்டது.
சூழல் கருதியே நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை. வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விசாரணையின் போது நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், நான் 15 நிமிடங்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் மாவட்ட ஆட்சியரிடம் பேசி ஐந்து நபர்கள் மட்டும் சென்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படுமா என்பதை கேட்டு சொல்லுங்கள் என்று ஆட்சியர் தரப்பு வழக்கறிஞரிடம் கூறினார்.
இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தால் தற்போது நிலுவையில் உள்ள இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க தயாராக இருக்கிறேன் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
இந்த நிலையில் அடுத்த கார்த்திகை தீபம் வருவதற்கு முன் உரிய முடிவு எடுக்கப்படும் என்று ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன், நீதிமன்றம் சொல்லும் ஐந்து நபர்களை மலை உச்சிக்கு சென்று பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக நாளை மறுநாள் 4 மணிக்கு உரிய முடிவை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
நாளை மறுநாள் மாவட்ட ஆட்சியர் ஆஜராக தேவையில்லை என்றும் மாநகர காவல் ஆணையர் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் கோயில் சொத்துக்கள் அறநிலையத்துறையின் சொத்துக்கள் அல்ல எனவும் கூறினார்.
