மத்திய – மாநில உறவுகள் குறித்து தமிழக அரசு அமைத்த உயர்மட்டக் குழுவின் அறிக்கையை வரவேற்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது , மத்திய அரசு தொடர்ந்து மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பறித்து வருவதாகவும் மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின் மத்திய – மாநில அரசுகள் இடையிலான உறவுகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை அளிக்க மூன்று பேர் கொண்ட உயர் மட்டக் குழுவை அமைப்பதாக அறிவித்தார்.
அதன்படி உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான அசோக் வர்தன் ஷெட்டி, தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு, மொழிக் கொள்கை, ஆளுநரின் பங்கு, கல்வி, சுகாதாரம், எல்லை நிா்ணயம், தோ்தல்கள் மற்றும் ஜிஎஸ்டி போன்ற 10 முக்கியப் பகுதிகளை உள்ளடக்கி முதல்வரிடம் அறிக்கை (பகுதி 1) கொடுத்தது. இந்த அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
தற்போது இக்குழு 2ஆவது பகுதியை தயார் செய்வதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 22ஆம் தேதி இக்குழு டெல்லியில் கூடி ஆலோசித்தது.
இந்தநிலையில் முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் குழுவின் முதல் பகுதியை வரவேற்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். கூட்டாட்சி என்பது அதிகாரக் குவிப்புக்கு எதிரான ஒரு பாதுகாப்பு அரண்” என்று அம்பேத்கர் கூறியிருப்பதை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், “பொதுப் பட்டியலின் விரிவான விளக்கங்கள், நிபந்தனையுடன் கூடிய நிதி மாற்றங்கள் மற்றும் மத்திய அரசால் வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் ஆகியவற்றால் மாநிலங்களின் தன்னாட்சி குறைந்து வருகிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர்கள் சிக்கலை ஏற்படுத்துகிறார்கள். அதிகாரமும் பொறுப்பும் சமமாக இருக்க வேண்டும் என்பதே கர்நாடகாவின் நிலைப்பாடு.
கூட்டாட்சித் தத்துவத்தைச் சீரமைக்க அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 245 முதல் 254 வரை மற்றும் ஏழாவது அட்டவணை ஆகியவற்றில் முறையான மாற்றங்கள் தேவை.
மொழி கொள்கை, கல்வி, பொது சுகாதாரம் மற்றும் நிதிப் பகிர்வு ஆகியவற்றில் மாநிலங்களுக்கு உள்ள அரசியலமைப்பு உரிமைகளை நிலைநாட்ட வேண்டியது அவசியம்.
மத்திய–மாநில உறவுகள் குறித்த தேசிய அளவிலான உரையாடலை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு கர்நாடகா முழு ஆதரவு தெரிவிக்கிறது.
அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து விவாதிக்கவும், கூட்டாட்சி தத்துவத்தில் சமநிலையை மீட்டெடுக்கவும் ‘மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் போன்ற ஒரு வலுவான தளத்தை மத்திய அரசு அமைத்துத் தர வேண்டும் .
இந்தியாவின் ஜனநாயக மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஆக்கபூர்வமாகப் பங்களிக்க கர்நாடகா தயாராக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சித்தராமையாவுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “எங்களது இந்த முயற்சிக்கு நீங்கள் அளித்துள்ள ஆதரவையும், கூட்டாட்சி தத்துவத்தை மீட்டெடுப்பது என்பது ஒரு கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும் என்ற உங்கள் கருத்தையும் நான் பெரிதும் மதிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
