நடுவானில் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை… திமுக கவுன்சிலர் கைது!

Published On:

| By Kavi

விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திமுக பிரமுகரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி சென்னையில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. இதில் திருவள்ளூர் நகராட்சி 6ஆவது வார்டு திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் அவரது நண்பரும் வழக்கறிஞருமான தியாகு ஆகியோர் பயணித்தனர். 

ADVERTISEMENT

இந்த விமானத்தில் அனாகாபுத்தூரில் வசித்து வந்த 25 வயதான பணிப்பெண் வேலை செய்து வருகிறார். 

இந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி பயணத்தின் போது,  மேற்குறிப்பிட்ட இருவரும் பணிப்பெண்ணை சைகை காட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். அந்தப் பெண்ணின் ஊரை கேட்டு கேலி செய்துள்ளனர். 

ADVERTISEMENT

உன்னுடைய ஊர் என்ன என்று இவர்கள் கேட்க, பணிப்பெண் மதுரை என்று சொல்லி இருக்கிறார். 

இதற்கு மதுரையில் ஆண்டிப்பட்டியா? கல்லுப்பட்டியா? என கேட்டு கிண்டல் செய்துள்ளனர். 

ADVERTISEMENT

இதற்கு பதில் அளிக்காமல் பணிப்பெண் சென்ற நிலையில், ஏய் இங்க வா? இன்று ஒருமையில் அழைத்து பேசியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் மீது கை வைத்து தொல்லை கொடுத்துள்ளார் திமுகவைச் சேர்ந்த பிரபாகரன்.

இந்த அத்துமீறலால் அதிர்ச்சியடைந்த அந்த பணிப்பெண் இது தொடர்பாக தனது உயர் அதிகாரியிடம் தகவல் தெரிவித்து பின்னர் மீனம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இது தொடர்பாக காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்தார்.

தொடர்ந்து இருவரையும் அழைத்து விசாரணை நடத்திய போலீசார் மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் என்று சொல்லி அனுப்பியுள்ளனர்.

ஆனால், போலீசார் சம்மன் அனுப்பியும் இருவரும் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளனர். 

இந்த சூழலில், நேற்று மாலை பிரபாகரனும் தியாகுவும் டெல்லியில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் சென்னை வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இந்த தகவலைத் தொடர்ந்து விமான நிலையம் சென்ற போலீசார் அவர்கள் விமானத்திலிருந்து இறங்கியதும் அங்கேயே வைத்து கைது செய்தனர். 

இவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு கண்டனம் தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (மார்ச் 3) தனது எக்ஸ் பதிவில், “கிருஷ்ணகிரி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரண்டரை வயது பச்சிளம் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் திமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பறக்கும் விமானத்தில் அரங்கேறியிருக்கும் மற்றுமொரு பாலியல் துன்புறுத்தல் சம்பவம் திமுகவினரை பார்த்தாலே பெண்கள் அச்சப்படும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.

தமிழகம், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என மேடைக்கு மேடை மார்தட்டிக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , தமிழகத்தில் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச் சம்பவங்களுக்கு காரணமே பெரும்பாலான திமுகவினர் தான் என்பது தெரியுமா ? தெரியாதது போல நடிக்கிறாரா ?

எனவே, பெண்களை போகப் பொருட்களாக மட்டுமே பார்க்கும் திமுகவினரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ஒடுக்கத் தவறினால், தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிரும் ஒன்றிணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு சம்மட்டி அடி கொடுப்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share