தெறி பட ரீ ரிலீசை ஒத்திவைப்பதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அறிவித்துள்ளார்.
2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்சன்ஸ் தொடர்ந்த வழக்கு நாளைய தினம் விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே ஜனநாயகன் வெளியாகாததால் அதிருப்தியில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, 10 ஆண்டுகளுக்கு முன் வெளியான விஜய்யின் தெறி படம் ஜனவரி 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவித்திருந்தார்.
ஆனால் அறிவித்தபடி படம் வெளியாகவில்லை. தொடர்ந்து ஜனவரி 23ஆம் தேதி படம் வெளியாகும் என்று கலைப்புலி தாணு அறிவித்தார். இந்நிலையில் திரௌவுபதி 2 படத்தின் இயக்குநர் மோகன் ஜி, ஜனவரி 23ஆம் தேதி தங்கள் படம் வெளியாகவுள்ளதால் புதிய இயக்குனர்கள் மற்றும் வளர்ந்து வரும் தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தெறி ரீ ரிலீஸை தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று, தெறி பட ரீ ரிலீஸை ஒத்திவைப்பதாக கலைப்புலி தாணு அறிவித்துள்ளார்.
அதில், “திரௌபதி 2 மற்றும் Hotspot 2 திரைப்படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று ,வளரும் இயக்குநர்கள், புதிய தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில்
“தெறி” திரைப்பட வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இயக்குநர் மோகன் ஜி, ‘திரௌபதி 2’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்தியுடன் நேரில் சென்று தாணுவை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

அதேசமயம் அஜித்குமார் நடிப்பில் 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான மங்காத்தா 2 திரைப்படம் ஜனவரி 23ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. எனவே விஜய் படத்தை மட்டும் ஒத்தி வைத்திருப்பது அவரது ரசிகர்களை டென்ஷனாக்கியுள்ளது.
