அம்பேத்கர் பிறந்தநாளில் சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மோதல் போக்கு உண்டானது பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. Tension on Ambedkar birthday
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் அம்பேத்கர் சிலை ஒன்று அமைந்துள்ளது. அவரது பிறந்தநாளை (இன்று – ஏப்ரல் 14) முன்னிட்டு திமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் அமைப்பினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்
இந்நிலையில் சங்கராபுரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த காலை 10 மணிக்கு நேரம் கொடுத்தது காவல்துறை. காலை 11 மணிக்கு திமுக எம்.எல்.ஏ உதயசூரியன் தலைமையில் திமுகவினர் மரியாதை செலுத்த நேரம் கொடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி பாஜக மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமையில் பாஜகவினர் மரியாதை செலுத்த வந்தனர்.
ஆனால் 10 மணிக்கு பாஜகவினர் மரியாதை செலுத்த வரவில்லை. ஊர்வலமாக வந்து மாலை அணிவிக்க வந்ததால் ஒரு மணி நேரம் தாமதமாக திமுகவினருக்கு கொடுத்த நேரமான 11 மணிக்கு வந்தனர். அதேசமயம் 11 மணிக்கு சரியாக திமுகவினர் வந்துவிட்டனர்.
அப்போது யார் முதலில் மாலை போடுவது என பிரச்சினை ஆரம்பித்தது. உதயசூரியன் எம்.எல்.ஏ பாஜகவினர் முதலில் மாலை அணிவித்துவிட்டு செல்லட்டும் என்று ஒதுங்கிக்கொண்டார்.
இந்தநிலையில் பாஜக மாவட்ட தலைவர் பாலசுந்தரம், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க மேலே ஏறினார். அந்த நேரத்தில் சங்கராபுரம் திமுக நகரச் செயலாளர் துரை தாகம்பிள்ளை பாஜகவினருடன், “எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் நீங்கள் எப்படி மாலை போடுவீர்கள். முதலில் நாங்கள் தான் மரியாதை செய்வோம்” என்று சொல்ல அங்கு கூடியிருந்த பாஜகவினருக்கும், திமுகவினருக்கும் தள்ளுமுள்ளு, கைகலப்பு ஏற்பட்டது.

இதை கண்ட அங்கு பணியில் இருந்த போலீசார் இரு தரப்பையும் தடுத்து நிறுத்தினர்.
அதுபோன்று சேலத்தில் நடந்த அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பாஜகவினருக்கும், தமிழக இளைஞர் இயக்கத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சனாதனத்தை வேரறுத்த அம்பேத்கர் புகழ் ஓங்குக என்று தமிழக இளைஞர் இயக்கத்தினர் கோஷம் எழுப்பிய போது, அதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து செருப்பு வீசினர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.Tension on Ambedkar birthday