அதிமுகவின் முகமூடியை போட்டுக்கொண்டுதானே பாஜக தமிழ்நாட்டிற்கு உள்ளே வருகிறது. அதனால் இது டெல்லிக்கும் தமிழகத்துக்குமான தேர்தல் என்பதுதான் உண்மை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 12) ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இன்று காலை நடைபயணம் சென்ற முதல்வர் பரமக்குடி திமுக வேட்பாளர் கதிரவனுக்கு ஆதரவாக பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். ஜனநாயகன் படம் ஆன்லைனில் வெளியானது குறித்த கேள்விக்கு, “அது குறித்து நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்றார்.
படம் இணையத்தில் வெளியானதற்கு காரணம் உதயநிதி ஸ்டாலின் என்று ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியது” என்ற கேள்விக்கு, “அப்படியா? எனக்கு தெரியவில்லை. ஆதவ் அர்ஜூனா செய்தியை எல்லாம் படிப்பதில்லை” என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.
எடப்பாடி பழனிசாமி திமுக தலைவர்கள் குறித்து அவதூறாக பேசுவது குறித்த கேள்விக்கு, “அவர் தோல்வி பயத்தில் விரக்திக்கு சென்றுவிட்டார். அதனால் அவர் விரக்தியில் பேசிக் கொண்டிருக்கிறார்” என்றார்.
திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி என விஜய் தொடர்ந்து தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு, “நோ கமெண்ட்ஸ்” என்றார்.
தமிழகத் தேர்தலை பொருத்தவரை தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் இடையிலான தேர்தல் என்று சொல்வது குறித்த கேள்விக்கு, “அதிமுகவின் முகமூடியை போட்டுக்கொண்டுதானே பாஜக தமிழ்நாட்டிற்கு உள்ளே வருகிறது. அதனால் இது டெல்லிக்கும் தமிழகத்துக்குமான தேர்தல் என்பதுதான் உண்மை” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
