கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் டீச்சர் வேலை: பி.எட் முடித்தவர்களுக்கு ‘குட் நியூஸ்’… சம்பளம், தகுதி விவரம் உள்ளே!

Published On:

| By Santhosh Raj Saravanan

Teaching job vacancies in Kendriya vidyalaya schools

“மத்திய அரசுப் பள்ளியில் டீச்சர் வேலை கிடைத்தால் வாழ்க்கை செட்டில் ஆகிவிடுமே!” என்று கனவு காணும் ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்த பட்டதாரிகளுக்கு, கேந்திரிய வித்யாலயா (KV) பள்ளிகள் ஒரு நிரந்தரமான நம்பிக்கையைக் கொடுத்து வருகின்றன. நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, ஒவ்வொரு கல்வியாண்டும் தொடங்கும் முன்பாகவோ அல்லது இடையில் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்பவோ அந்தந்தப் பள்ளிகள் தனித்தனியாக அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம்.

ADVERTISEMENT

என்னென்ன பதவிகள்?

வழக்கமாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்று நிலைகளில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்:

ADVERTISEMENT
  • முதுகலை ஆசிரியர் (PGT): இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு.
  • பட்டதாரி ஆசிரியர் (TGT): தமிழ், ஆங்கிலம், இந்தி, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு.
  • இடைநிலை ஆசிரியர் (PRT): தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கானது.

இதுதவிர, யோகா ஆசிரியர், விளையாட்டுப் பயிற்சியாளர் (Sports Coach), கணினிப் பயிற்றுநர் (Computer Instructor), செவிலியர் (Nurse) மற்றும் கவுன்சிலர் போன்ற பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி என்ன?

ADVERTISEMENT
  • PGT பணிக்கு: சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலைப்பட்டம் (Master’s Degree) மற்றும் பி.எட் (B.Ed) முடித்திருக்க வேண்டும்.
  • TGT பணிக்கு: சம்பந்தப்பட்ட பாடத்தில் இளங்கலைப்பட்டம் மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும். கூடவே, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (CTET – Paper II) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்.
  • PRT பணிக்கு: பிளஸ் 2 தேர்ச்சியுடன் டி.எட் (D.Ed) அல்லது பி.எட் முடித்து, சிடெட் தாள்-1ல் (CTET – Paper I) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் எவ்வளவு?

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணிபுரிவது கௌரவமானது மட்டுமல்ல, கைநிறையச் சம்பளமும் கிடைக்கக்கூடியது.

  • ஒப்பந்த அடிப்படையில் (Contractual) தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, அந்தந்த ஊர் நிலவரத்தைப் பொறுத்து மாதம் ரூ.21,250 முதல் ரூ.27,500 வரை தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.
  • நிரந்தரப் பணியிடங்கள் என்றால், 7ஆவது ஊதியக் குழுவின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கான முழுச் சம்பளம் மற்றும் சலுகைகள் கிடைக்கும்.

தேர்வு முறை:

பெரும்பாலான நேரங்களில் அந்தந்தப் பள்ளி வளாகத்திலேயே நேரடித் தேர்வு (Walk-in Interview) நடத்தப்படும். விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களின் கற்பித்தல் திறன் (Teaching Skills) சோதிக்கப்படும்.

எப்படித் தெரிந்துகொள்வது?

உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (Website -> Announcements Section) இது தொடர்பான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்படும்.

குறிப்பாக, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அடுத்த கல்வியாண்டிற்கான (2026-27) ஒப்பந்த ஆசிரியர் தேர்வு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர் பணிக்குத் தயாராகி வருபவர்கள், இப்போதே தங்கள் சான்றிதழ்களைத் தயார் நிலையில் வைத்திருப்பது நல்லது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share