கடைசி டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்குச் சென்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றியது. இந்த நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் நடந்து முடிந்த நான்கு போட்டிகளில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி இருந்தது.
இதைத் தொடர்ந்து கடைசி டி20 போட்டி நேற்று (ஆகஸ்ட் 7) இரவு நடைபெற்றது. ஏற்கெனவே தொடரை கைப்பற்றிய நிலையில் அணியில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அணிக்கு ஹர்த்திக் பாண்டியா கேப்டனாக தலைமை தாங்கினார். இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் விளையாடியது. அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய இஷான் கிஷன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்ரேயஸ் அய்யர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். அவர் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த தீபக் ஹூடா 38 ரன்களும், சஞ்சு சாம்சன் 15 ரன்களும், கேப்டன் ஹர்த்திக் பாண்டியா 28 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது.
அந்த அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அணியில் சிம்ரன் ஹெட்மயர் மட்டும் தன் பங்கும் அதிரடியுடன் விளையாடி 56 ரன்கள் எடுத்தார். ஆனால், மற்ற வீரர்களோ சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
குறிப்பாக இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். இந்திய சுழற்பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 15.4 ஓவர்களில் 100 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
-ராஜ்
