டிஜிட்டல் திண்ணை: ‘ஜெயில் பயத்தை ED காட்டிடுச்சு பரமா’.. நிம்மதி தந்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன?

Published On:

| By Minnambalam Desk

Tasmac Case

வைஃபை ஆன் செய்ததும், டாஸ்மாக் வழக்கில் அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம் என்பது உள்ளிட்ட ப்ளாஷ் நியூஸ்களை படித்தபடியே மெசேஜை டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். Supreme Court Brings Relief in TASMAC Case

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை ஏற்கனவே சோதனைகள் நடத்தி ரூ1,000 கோடி முறைகேடு நடந்திருக்கிறது என அறிக்கை விட்டிருந்தது. அப்போதிருந்ததை விட தற்போது, டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை காட்டிய வேகம்தான் தொடர்புடைய அத்தனை பேரையும் ரொம்பவே பதற்றமடைய வைத்துவிட்டதாம்.

டாஸ்மாக் அதிகாரிகளிடம் பல மணிநேரம் விசாரணை, ரதீஷ் அபார்ட்மெண்ட் சீல் வைப்பு, விசாரணை வளையத்தில் வாலாடி கார்த்திக், ஆகாஷ் பாஸ்கர் என்கிற தகவல்கள் எல்லாம், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் சிறைக்கு போன ‘சம்பவங்களை’ பலருக்கும் கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டதாம்.

அதுவும் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனிடம் நடத்தப்பட்ட பல மணிநேர தொடர் விசாரணையில் பல்வேறு தகவல்களை அமலாக்கத்துறை பெற்றிருந்ததாம்; அத்துடன் மதுபான நிறுவனங்களுக்கு பாட்டில்களை சப்ளை செய்தவர்களிடமும் டாஸ்மாக்குக்கு சரக்குகளை சப்ளை செய்தவர்களிடமும் அமலாக்கத்துறை, மிக முக்கியமான தகவல்களைப் பெற்றுவிட்டதாம் ..

மேலும் இந்த விவகாரத்தில், ரதீஷ் அண்ட் கோவின் அணுகுமுறையில் கடுப்பில் இருந்த சில அதிகாரிகளே, ரதீஷ் பற்றியான தகவல்களை அமலாக்கத்துறையுடன் பகிர்ந்தும் கொண்டனராம்.

டாஸ்மாக் முறைகேட்டில் ‘தொட்டு விடும் தூரத்தில்தான் டார்கெட்’ என்ற ரேஞ்சில் அமலாக்கத்துறை வேகமாக முன்னேறியதால் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் கூட ஆடித்தான் போயினர் என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள். ‘அங்கேயே’ போய்விட்ட நிலையில் இனி ‘இங்கேயும்’ வருவார்களே என்ற பதற்றத்தில் அதிகாரிகள் சிலர், டெல்லியைத் தொடர்பு கொண்டு பேசி இருக்கின்றனர். ‘அங்கே’ போனாலும் அதிகாரிகளாகிய ‘நாங்க’ எல்லாம் பாதிக்காத அளவுக்கு பார்த்து கொள்ளுங்கள் என்பதுதான் இந்த உரையாடலின் சாராம்சமாம்.

இப்படி அத்தனை தரப்பையும் ஆடிப் போக வைத்திருந்த ED நடவடிக்கைகள் அனைத்தும் இப்போது உச்சநீதிமன்றத்தின் காட்டமான கண்டனத்தால் தற்காலிகமாக நிறுத்தப்படும் நிலைமை உருவாகிவிட்டது.

உச்சநீதிமன்றம் இன்று டாஸ்மாக் வழக்கில், அமலாக்கத்துறையின் அனைத்து விசாரணைகளுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது; அத்துடன் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கும் கடுமையாக கண்டனம் தெரிவித்த தகவல், பதற்றத்தில் இருந்த அத்தனை பேரையும் நிம்மதி பெருமூச்சு விட வைத்துவிட்டதாம்.

‘தலை’க்கு வந்துவிட்டது என நினைத்தோம்.. இப்போது ‘தலையும்’ தப்பிவிட்டது என்பதுதான் இந்த பெருமூச்சின் பின்னணியாம். வாலாடி கார்த்திக், ஆகாஷ் பாஸ்கரன் என நெருக்கடியில் இருந்த அமைச்சர் அன்பில் மகேஸ் தரப்பும் இப்போதுதான் நிம்மதி அடைந்துள்ளதாம்.

இவர்கள்தான் என்றில்லை.. அமலாக்கத்துறையால் குறி வைக்கப்பட்ட, அமலாக்கத்துறையின் பிடியில் உள்ள அமைச்சர்கள் பலரும், இனி சில மாதங்கள் நிம்மதியாக இருக்கலாம் என பெருமூச்சு விடுகின்றனர்.

இத்தனையையும் அமைதியாகப் பார்க்கும் இந்த தரப்புகளின் நலன் விரும்பிகளோ, இதுவரை எப்படியோ.. ஓராண்டுதான்.. தேர்தல் வருகிறது.. இனியாவது உரிய கவனத்துடன் செயல்படுவதுதான் எல்லோருக்கும் நல்லது என்கிற விருப்பத்தையும் தெரிவித்து வருகின்றனராம்.

சரி உச்சநீதிமன்றத்தில் இன்று என்னதான் நடந்தது?

உச்சநீதிமன்றத்தில் டாஸ்மாக் வழக்கு விசாரணை இன்று காலை தொடங்கிய போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வழக்கில் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை 41 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்திருக்கிறது; தனிநபர்கள் தொடர்புடைய இந்த வழக்கில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்துக்குள் நுழைந்து அமலாக்கத்துறை சோதனை நடத்தியது; பின்னர் பலரது செல்போன்கள், லேப்டாப்களை பறிமுதல் செய்து அதில் இருந்த தகவல்களையும் நகலெடுத்துக் கொண்டது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனால்தான் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மிக கடுமையான குரலில், அனைத்து வரம்புகளையும் அமலாக்கத்துறை மீறிவிட்டது; இந்த விசாரணைகளுக்கு இடைக்கால தடை விதிக்கிறோம் என அதிரடியாக உத்தரவிட்டார்.

அப்போதும் கூட அமலாக்கத்துறை தரப்பில், ரூ1,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என வாதிட முயன்றனர். இதற்கு இடம் தராத தலைமை நீதிபதி, இதற்கு ஏதாவது முகாந்திரம் இருக்கிறதா? என எதிர் கேள்வி கேட்டு அமைதியாக்கிவிட்டார்.

இன்றைய விசாரணையில், அமலாக்கத்துறை நடவடிக்கைகள் அரசியல் சாசனத்தை மீறியதாக உள்ளது; வரம்புகளை மீறிவிட்டது என்று விமர்சித்ததுடன் நாட்டின் கூட்டாட்சி அமைப்பையே சிதைக்கிறது என்றும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தார் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய்.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால்தான் ரொம்பவே பதற்றத்தில் இருந்தவர்கள் இப்போது ‘நிம்மதியாக’ இருக்கின்றனராம்.. இருந்தாலும் இது இடைக்கால தடைதானே.. கொண்டாட என்ன இருக்கிறது என பீதியை கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கின்றனர் பாஜக தலைவர்கள் என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப்லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share