டிஜிட்டல் திண்ணை: இன்று சோனியா.. நாளை மோடி.. டெல்லியில் ஸ்டாலின் வியூகம் என்ன?

Published On:

| By Minnambalam Desk

MK Stalin Delhi

வைஃபை ஆன் செய்ததும் டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் பரபர சந்திப்புகள்; விழுப்புரத்தில் அமைச்சர் எம்ஆர்கே எச்சரிக்கை பேச்சு; ராமதாஸின் அதிதீவிரப் போராட்ட திட்டம் என பரபரப்புகளுக்கு குறைவில்லாமல் மெசேஜை விறுவிறுவென டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். What is CM MK Stalin

முதலில் டெல்லி விஷயங்களைப் பார்ப்போம்..

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று டெல்லி சென்றடைந்தார். டெல்லியில் வழக்கம் போல திமுகவினர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் உடனிருந்தார்.

சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து விசாரித்தார் ஸ்டாலின். சோனியாவும் ஸ்டாலின் மற்றும் அவரது தாயார் தயாளு அம்மாள் உடல்நலன் குறித்து அக்கறையுடன் விசாரித்தார். இந்த சந்திப்பில், அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து விரிவாக பேசப்படாவிட்டாலும் ‘முன்கூட்டியே’ ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் சோனியா.

இன்று சோனியா காந்தியை சந்தித்த ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின், இந்த ஆண்டு பங்கேற்பது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இது ஒருபுறம் இருந்தாலும் நிதி ஆயோக் கூட்டத்தில் முன்வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகள், கருத்துகள் ஆகியவற்றை தயார் செய்து கையோடு எடுத்துச் சென்றிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

அத்துடன், நிதி ஆயோக் கூட்ட இடைவெளி நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தனியே சந்தித்துப் பேசவும் ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது. தற்போதைய நிமிடம் வரை நேரம் கிடைக்கவில்லைதான். இருந்தாலும் பிரதமர் மோடியை தனியே சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைக்கும் போது அவரிடம் கொடுக்க வேண்டிய கோரிக்கைப் பட்டியல் ஒன்றும் முன்கூட்டியே தயாரிக்கப்பட்டுள்ளதாம்; இந்த கோரிக்கைகள் குறித்து பேசும் போது ‘மற்ற பிரச்சனைகள்’ பற்றியும் பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் குறிப்பிடுவார் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.

சரி விழுப்புரம் பஞ்சாயத்துக்கு வருவோம்..

விழுப்புரம் மாவட்ட திமுகவில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டங்கள்தான் இப்போது திமுகவில் பரபரப்பான பேசுபொருளாக இருந்து வருகிறது.

திமுகவில் கடலூர் கிழக்​கு, விழுப்​புரம், காஞ்​சிபுரம் தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கான பொறுப்பாளராக அண்மையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். முன்னதாக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு விழுப்புரம் மாவட்டம் ஒதுக்கப்பட்டிருந்தது.

விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்ட நிலையில் விழுப்புரம் வடக்கு, தெற்கு மற்றும் விழுப்புரம் மத்திய மாவட்டங்களின் செயற்குழு கூட்டம் நேற்றும் இன்றும் நடைபெற்றது.

இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே, பஞ்சாயத்தும் வெடித்தது. விழுப்புரம் மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் தொடர்பான பேனர்கள், போஸ்டர்கள் எதிலும் மாவட்டத்தின் சீனியரான முன்னாள் அமைச்சர் பொன்முடியின் படங்கள் இடம் பெறாமல் பார்த்துக் கொண்டார் மா.செ. லட்சுமணன் எம்.எல்.ஏ. இது பொன்முடி ஆதரவாளர்களை ரொம்பவே கொதிக்க வைத்துவிட்டதாம்.

இந்த கொந்தளிப்புகளுக்கு நடுவே, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் திண்டிவனத்தில் செஞ்சி மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திமுக விழுப்புரம் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இந்த மாவட்டத்துக்கு அமைப்பாளர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி. இதனால் பொன்முடியும் மேடையில் அமர்ந்திருந்தார். இதில் பேசிய பொன்முடி, இத்தொகுதியில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும்; மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.

பின்னர் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பொன்முடியை ஆஹோ ஓஹோவென புகழ்ந்து தள்ளினார். “நாங்கள் எல்லாம் 1989-ம் ஆண்டு திமுக பேட்ஜ். ஆனால் பொன்முடி 1985-ம் ஆண்டு பேட்ஜ். எனக்கு கட்சியில் சீனியர்.. அவர் முன்பாக எனக்கு பேசவே பயமாக இருக்கிறது.. பொன்முடி பேராசிரியர் மட்டுமல்ல.. பேராசிரியர்களுக்கு எல்லாம் பேராசிரியர் என பாராட்டித் தள்ளிவிட்டார். இதனால் பொன்முடி ஆதரவாளர்கள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்.

பொன்முடியை ரொம்பவே பாராட்டிய கையோடு, அவரை கடுமையாக எதிர்க்கும் திமுக விழுப்புரம் மத்திய மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் இன்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்றார். இந்தக் கூட்டத்துக்கு வருகை தந்த மா.செ. லட்சுமணன் எம்.எல்.ஏ.வுக்கு தடபுடலான வரவேற்பு கொடுத்தனர் அவரது ஆதரவாளர்கள். அத்துடன் பொன்முடியின் போட்டோக்களை புறக்கணித்து பேனர்கள் வைக்கப்பட்ட சர்ச்சை ஊடகங்களிலும் பெரிதாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது. இதனால் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் என்ன பேசுவார் என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இதற்கு ஏற்ப டென்ஷனுடன் பேசத் தொடங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம். ஆனால் நான் பார்க்கும் போதே ஒருங்கிணைப்பு என்பது இங்கே இல்லை. நேற்று பார்த்தேன் ஒரு பேனர் இருந்தது.. இன்று ஒரு பேனர் இருக்கிறது (பொன்முடி படம் புறக்கணிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி பேசினார்).. இது எல்லாம் என்ன? இப்படி இருந்தால் எப்படி ஜெயிக்க முடியும்?

நான் 35 ஆண்டுகாலம் மாவட்ட செயலாளராக இருக்கிறேன். கடலூர் மாவட்டத்தில் சரவணனுக்கு 2 முறை தேர்தலில் போட்டியிட சீட் வாங்கிக் கொடுத்தேன். இதில் ஒரு முறை வெற்றி பெற்றார்; ஒரு முறை தோல்வி அடைந்தார். இருந்தாலும் சரவணன் இப்போது என்னை நினைத்துப் பார்க்கவில்லை.. என்னை மிஞ்சிப் போக நினைப்பது சரவணனின் இயல்பு. ஆனாலும் அவரை அடக்கி, நானும் வேகமாக ஓட வேண்டும்” என்று பேசியபடியே மா.செ. லட்சுமணன் பக்கம் திரும்பினார்.

மா.செ. லட்சுமணனை பார்த்து, நீ கட்சிக்கு வந்து எத்தனை வருஷம் ஆகுது? என கேள்வி கேட்டார் எம்ஆர்கே பன்னீர்செல்வம். இதற்கு, லட்சுமணன் எழுந்து திமுகவுக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிறது என பதில் சொல்ல, கட்சிக்கு வந்து 4 ஆண்டுகள்தான் ஆகிறது.. அதற்குள் ஏன் பறக்கிறீங்க? அனைவரையும் அரவணைத்துப் போக வேண்டும். இங்கே அதிமுக, பாமக இருக்கிறது. அதிமுகவுடன் பாமக கூட்டணி சேர்ந்தாலும் நம்முடன் விசிக இருக்கிறது.. அவர்களை அரவணைத்து இந்த மாவட்டத்தின் 7 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் என பட்டாசாய் வெடித்துப் பேசினார். இதனால் லட்சுமணன் ஆதரவாளர்கள் கண்கள் சிவக்க கூட்டத்தில் இருந்து புறப்பட்டனர் என டைப் செய்தபடியே, ‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே’ என்கிற பாடலை பாடியபடியே அடுத்த மெசேஜ்ஜுக்கு தாவியது வாட்ஸ் அப்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை டாக்டர் ராமதாஸ் நடத்தினார். பாமகவில் பதவி இழந்த மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் பேசிய டாக்டர் ராமதாஸ், நானும் அன்புமணியும் ஒன்றாகத்தான் இருக்கிறோம்; சிலர் பரப்பும் வதந்திகளை நீங்கள் நம்ப வேண்டாம்; உங்களுக்கு ஏதாவது குறை இருந்தால் என்னிடம் தெரிவியுங்கள் என்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை என டைப் செய்தபடியே Sent பட்டனை அழுத்திவிட்டு ஆப் லைனுக்குப் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share