தமிழகத்துக்கு நிதி ஒதுக்காததற்கு காரணம் இதுதான்: மத்திய அரசு விளக்கம்!

Published On:

| By Kavi

தமிழகத்துக்கு கல்வி நிதி ஒதுக்காதது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், புதிய கல்வி கொள்கை உள்ளிட்ட மத்திய அரசின் ஒப்பந்தங்களில் கையெழுத்திடாததால் நிதி ஒதுக்கவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளியில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவிகித இட ஒதுக்கீடு மாணவர் சேர்க்கை இன்னும் தொடங்கப்படவில்லை. 

எனவே உடனடியாக மாணவர் சேர்க்கையை தொடங்க கோரி கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி ஈஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு நேற்று (மே 22) நீதிபதிகள் ஜி.எஸ். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, தமிழகத்துக்கான கல்வி நிதியை ஏன் ஒதுக்கவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு மத்திய அரசு தரப்பில் அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு வருவதாகவும் சில காரணங்களால் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது. 

இதற்கு தமிழக அரசு சார்பில் மத்தியில் ஆளும் கட்சிக்கு தமிழகத்தில் ஒரு எம்பி கூட இல்லை என்பதால் நிதி ஒதுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து 25 சதவிகித இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விபரங்களை சமர்ப்பிக்கும் படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். 

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று (மே 23) விசாரணைக்கு வந்தது. 

அப்போது மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல் சுந்தரேசன் ஆஜரானார்.

அவர், “புதிய கல்வி கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் 25 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான கல்வித் தொகை ஒதுக்கப்படவில்லை” என்று வாதம் முன் வைத்தார். 

பல்வேறு மாநிலங்களும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில் தமிழக அரசு மட்டும் கையெழுத்திடவில்லை என்று அவர் குறிப்பிட்டார். 

இதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என்பது பெரியண்ணன் மனப்பான்மையை காட்டுகிறது என்று வாதிட்டார். 

இருதரப்பு வாதங்களையும் தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். 

அதேசமயம் 25 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக வரும் மே 28ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share