ADVERTISEMENT

அரசியல் சாசன மீறல்.. அனைத்து வரம்புகளும் மீறல்.. கூட்டாட்சியை சிதைக்கிறது- டாஸ்மாக் வழக்கில் ED-க்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

Published On:

| By Minnambalam Desk

TASMAC Supreme Court

தமிழகத்தில் டாஸ்மாக் வழக்கு விசாரணையில், அரசியல் சாசனத்தை மீறுகிறது அமலாக்கத்துறை; நாட்டின் கூட்டாட்சி அமைப்பையே அமலாக்கத்துறை சிதைக்கிறது என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கடும் கண்டனம் தெரிவித்தார். Supreme Court Slams ED in TASMAC Case
தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக்கில் ரூ1,000 கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி அமலாக்கத்துறை சோதனைகள், விசாரணைகளை நடத்தி வருகிறது. இந்த விசாரணைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ்ஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. இந்த விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 2017-ம் ஆண்டு முதல் தமிழக அரசு, தனி நபர்களுக்கு எதிராக 41 முதல் தகவல் அறிக்கைகளைப் (FIR) பதிவு செய்துள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் 2025-ம் ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய பின்னரே தனிநபர் விவரங்கள் வெளியாகின. செல்போன்கள் உள்ளிட்ட அனைத்தையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தனிநபர் உரிமை மீறலாகும் என வாதிட்டார்.

ADVERTISEMENT

அப்போது தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், ஒரு நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் இப்படி நடந்து கொள்ளலாமா? அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறிவிட்டது. அனைத்து விசாரணைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது என்றார்.

மேலும், அதிகாரிகளுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை ஏன் வருகிறது? குற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை எப்படி யூகித்தது? அமலாக்கத்துறை இது தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

அத்துடன், அரசியல் சாசனத்தை மீறி செயல்படுகிறது அமலாக்கத்துறை; உண்மையில் அனைத்து வரம்புகளையுமே அமலாக்கத்துறை மீறிவிட்டது எனவும் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கண்டனம் தெரிவித்தார்.

அப்போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜூ, மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது.. நாங்கள் பதிலளிக்க வேண்டும் என்றார். இதனையடுத்து, ஆமாம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுங்கள், நாங்கள் உத்தரவு பிறப்பித்துவிட்டோம் என்றார் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்.

ADVERTISEMENT

மேலும் மனுதாரர்கள் சார்பான ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, அனைத்து செல்போன்களிலும் தகவல்கள் நகல் எடுக்கப்பட்டுள்ளன என குற்றம்சாட்டினார். இதற்கு, அமலாக்கத்துறை கூட்டாட்சியையே சிதைத்துக் கொண்டிருக்கிறது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீண்டும் கண்டனம் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share