விஜயகாந்திற்கு அன்று படத்தில் வாக்கு கேட்ட நான் இன்று அவரது மகனுக்கு முதலமைச்சராக வாக்கு கேட்கிறேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் சத்திர ரெட்டியப்பட்டியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 5) தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய் பிரபாகரனுக்கு வாக்கு கேட்டுப் பேசிய முதலமைச்சர், தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அதில்,”எனது ஆருயிர் நண்பர் விஜயகாந்த் மற்றும் அன்பு சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் அன்பு மகன்தான் இங்கே வேட்பாளராக நிற்கிறார். தேமுதிக இளைஞரணி செயலாளராகத் துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் விஜய பிரபாகரனுக்கு நீங்கள் முரசு சின்னத்தில் உங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும்.
விஜய பிரபாகரனுக்கு வாக்கு கேட்கும் போது எனது நினைவுகள் எல்லாம் எங்கே செல்கிறது தெரியுமா? அவருடைய தந்தை, எனது இனிய நண்பர், ஆருயிர் நண்பர் கேப்டன் விஜயகாந்த். ‘மக்கள் ஆணையிட்டால்’ என்ற திரைப்படத்தில் வேட்பாளராக நடித்தார். அதில் நான் கௌரவ வேடத்தில் பாட்டு பாடி வருவேன்.
அந்தப் படத்தில் வேட்பாளராக இருக்கும் விஜயகாந்தை ஆதரித்து நான் பாடும் பாடல்.. கலைஞர் எழுதிய அந்தப் பாடல் கூட எனது மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. ‘ஆற அமர கொஞ்சம் யோசித்துப் பாரு… அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சுப் பாரு…’ என்று அந்தப் பாடல் வரும். இப்படி இவருடைய அப்பாவிற்கு நான் திரைப்படத்தில் ஓட்டு கேட்டு நடித்தேன். இன்று அவருடைய அன்பு மகனுக்கு முதலமைச்சராக நேரடியாக வாக்கு கேட்க வந்திருக்கிறேன்” என்று விஜயகாந்த் உடனான தனது நினைவுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார்.
