தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
2011-ல் கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின், அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை 2,739 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆனால், இத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது; அதனால் ஸ்டாலின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சைதை துரைசாமி வழக்கு தொடர்ந்தார்.
2017-ம் ஆண்டு இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கு எதிராக 2017-ல் உச்சநீதிமன்றத்தில் சைதை துரைசாமி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று ஜனவரி 21-ந் தேதி தொடங்கியது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் அமர்வு இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது.
அப்போது மனுதாரர் சைதை துரைசாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தாமா சேஷாஸ்திரி, 2011-ல் துணை முதல்வராக இருந்த ஸ்டாலின், தேர்தலில் வெற்றி பெற அதிகார துஷ்பிரயோகம் செய்தார்; பண பலத்தை பயன்படுத்தினார் என வாதிட்டார். ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை இன்றும் நடைபெற உள்ளது.
