15 லட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொண்ட சிவகங்கை தொகுதியில் களம் பல வித்தியாசமான பரபரப்புகளுக்கு மத்தியில் கடும் போட்டியில் இருந்து வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இத்தொகுதியில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிட்டிங் எம்.பியுமான கார்த்தி சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் புதுமுகமான சேவியர் தாஸ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவரும், யாதவ மகா சபை தலைவரும், வின் தொலைக்காட்சி உரிமையாளருமான தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார்.
சமூக ரீதியாக வாக்குகள்
சிவகங்கை தொகுதியில் முக்குலத்தோர், யாதவர், முத்தரையர், தேவேந்திர குல வேளாளர், பறையர், செட்டியார் உள்ளிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் கணிசமாக உள்ளனர். சிறுபான்மையினரைப் பொறுத்தவரை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிறித்தவர்கள் 5.64% சதவீதமும், இசுலாமியர்கள் 5.55% சதவீதமும் இருக்கிறார்கள். ஆக மொத்தமாக 11% சதவீதத்திற்கும் மேலாக சிறுபான்மையினர் வாக்குகள் இத்தொகுதியில் இருக்கிறது. பட்டியலினத்தவர் வாக்குகள் 15.7% இருக்கிறது.
சிவகங்கையின் சட்டமன்றத் தொகுதிகள்
சிவகங்கை மக்களவை தொகுதி என்பது சிவகங்கை, திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.
இந்த 6 சட்டமன்றத் தொகுதிகளில் 4 தொகுதிகளில் திமுகவும், 1 தொகுதியில் காங்கிரசும், 1 தொகுதியில் அதிமுகவும் வெற்றி பெற்றன. முக்கியமான தகவல் என்னவென்றால் சிவகங்கை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர் தொகுதியில் வென்ற பெரியகருப்பன், ஆலங்குடி தொகுதியில் வென்ற மெய்யநாதன், திருமயம் தொகுதியில் வென்ற ரகுபதி ஆகிய 3 பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் கையில் இருந்தது சிவகங்கை?
சிவகங்கை மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியே தனது கையில் வைத்திருந்தது. 1980இலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை இத்தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது என்றே சொல்லலாம். ப.சிதம்பரம் இத்தொகுதியில் 7 முறை வெற்றி பெற்றிருக்கிறார். இந்தியாவிற்கு ஒரு நிதி அமைச்சரைக் கொடுத்த தொகுதி என்ற பெருமை சிவகங்கை தொகுதிக்கு உண்டு. 2014 ஆம் ஆண்டு அதிமுகவின் கைகளுக்குச் சென்ற இத்தொகுதி மீண்டும் காங்கிரசின் கைகளுக்கு வந்து சேர்ந்தது. ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி ஆனார். இப்போது மீண்டும் அவரே களமிறங்கியிருக்கிறார்.
கார்த்திக்கு வரும் எதிர்ப்பு
காங்கிரசில் இந்த முறை கார்த்தி சிதம்பரத்திற்கு சீட்டு கொடுக்கக் கூடாது என்று கட்சிக்குள்ளேயே நிர்வாகிகள் கலகம் செய்தனர். சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் சிவகங்கையில் கூட்டம்போட்டு கார்த்தி சிதம்பரத்துக்கு சீட்டு தரக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றினர். அதையெல்லாம் தாண்டி அவருக்கே சீட் கொடுக்கப்பட்டதால், சுதர்சன நாச்சியப்பன் மற்றும் நாடு கட்டமைப்புப் பிரமுகர்கள் கார்த்தி சிதம்பரத்துக்கு இன்னமும் எதிராகவே செயல்பட்டு வருகிறார்கள்.
மேலும் கார்த்தி சிதம்பரம் கிராமப்புறங்களுக்கு சென்று மகளிர்க்கு ஆயிரம் ரூபாய், 100 நாள் வேலைத் திட்டம் 150 நாளாக்கப்படும், சம்பளம் 400 ரூபாயாக வழங்கப்படும், ஏழைப் பெண்களுக்கு வருடம் 1 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என்பதையெல்லாம் சொல்லி வாக்கு கேட்கிறார். அதேநேரம் பல கிராமங்களில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிர்ப்பு இருக்கிறது.
இவற்றையெல்லாம் தாண்டி கூட்டணி பலம், கட்சி பலம், மூன்று அமைச்சர்களின் தொகுதி பலம் மற்றும் குடும்பப் பின்னணி என்று பெரும் பலத்துடன் களத்தில் நிற்கிறார் கார்த்தி சிதம்பரம்.
தேவநாதன் யாதவின் பலம் என்ன?
பாஜக சார்பில் போட்டியிடும் யாதவ மகா சபை தலைவரும், வின் டிவி உரிமையாளருமான தேவநாதன் யாதவ் சென்னையைச் சேர்ந்தவர். தமது சாதி சங்கத்தின் மூலம் தொடர்ச்சியாக பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வரும் அவருக்கு தற்போது சிவகங்கையில் சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில் உள்ள திருவாடனை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார், அத்தேர்தலில் 11,842 வாக்குகளை மட்டுமே பெற்றார் என்றாலும், மீண்டும் அவர் பாஜகவிடம் ராமநாதபுரம் தொகுதியை எதிர்பார்த்தார். ஆனால் ராமநாதபுரம் தொகுதி பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டதால் யாதவர் வாக்குகளைக் குறிவைத்து சிவகங்கைக்கு தாவியிருக்கிறார் தேவநாதன் யாதவ்.
பாஜகவின் சிவகங்கை மாவட்டத் தலைவரான மேப்பல் சக்தி சிவகங்கை தொகுதியை தனக்கு எதிர்பார்த்தார். அவருக்கு மறுக்கப்பட்டுதான் தேவநாதன் யாதவ்வுக்கு அளித்திருக்கிறார்கள். இதனால் சிவகங்கை மாவட்ட பாஜகவினரின் ஒத்துழைப்பு தேவநாதனுக்கு பெரிதாக இல்லை. அவராகவே பிரச்சாரத்துக்கு சென்று வந்துகொண்டிருக்கிறார்.
அதிமுக வேட்பாளரின் நம்பிக்கை
அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் அதிமுக மாவட்டச் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதனின் ஆதரவாளர். கிறித்துவக் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர். இதனால் நாடு கூட்டமைப்பில் இருந்தும் கிறித்தவ சமுதாயத்தில் இருந்தும் தனக்கு ஆதரவு கிடைக்குமா என்று பலத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறார். களப் பணிகளில் அதிமுக வேகமாகவே இருக்கிறது. ஆனாலும் அதிமுகவின் சில முக்கிய முக்குலத்துப் புள்ளிகளே ஓபிஎஸ் சுக்கு ஆதரவாக அவ்வப்போது சிவகங்கையைவிட்டு ராமநாதபுரத்துக்கு நைசாக சென்றுவிட்டு வருகிறார்கள்.
சேவியர் தாஸ், அதிமுகவின் கடந்த கால திட்டங்களை சொல்லி, திமுக ஆட்சியின் மீதான அதிருப்திகளை தனக்கு வாக்குகளாக மாற்றிக்கொள்ளும் விதமாக பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் கிராமங்களுக்குச் சென்று கார்த்தி சிதம்பரத்திற்கு நீங்க ஓட்டு போட்டா அவர் லண்டனுக்கு போய்டுவார்..அவர பாக்கனும்னா உங்களுக்கு பாஸ்போர்ட் வேணும்..நான் கிராமத்துக்காரன் எனக்கு ஓட்டு போடுங்க என்று கேட்டு வருகிறார். அதிமுகவின் கட்டமைப்பும், இரட்டை இலை சின்னமும் அவரது பலமென நம்பி களத்தில் குதித்திருக்கிறார் சேவியர் தாஸ்.
கார்த்தியை கரையேற்றும் அமைச்சர்கள்
ஆலங்குடி மெய்யநாதன்,திருமயம் ரகுபதி, திருப்பத்தூர் பெரியகருப்பன் என மூன்று அமைச்சர்கள் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறார்கள். அமைச்சர் பெரிய கருப்பன் யாதவர் சமூக வாக்குகளையும், அமைச்சர் மெய்யநாதன் முத்தரையர் சமூக வாக்குகளையும் குறிவைத்து தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக எஸ்.புதூர் பகுதியில் கார்த்தி சிதம்பரம் சென்றபோது அங்கே அவருக்கும் முத்தரையர் சமுதாய இளைஞர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதன் விளைவாக அமைச்சர் மெய்யநாதனும் அப்பகுதியில் கவனம் செலுத்தி வருகிறார். யாதவர் சமூகத்தைச் சேர்ந்த ராஜகண்ணப்பன் பெரும்பாலும் ராமநாதபுரம் தொகுதியிலேயே கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது சிவகங்கையையும் கவனித்துக் கொள்கிறார். இப்படி கார்த்திக்காக 4 அமைச்சர்கள் களமிறங்கியிருக்கின்றனர்.
மொத்தத்தில் சிவகங்கையைப் பொறுத்தவரை போட்டி காங்கிரசுக்கும் அதிமுகவிற்கும் என்பதாகத்தான் இருக்கிறது. பாஜக சார்பில் போட்டியிடும் தேவநாதன் யாதவ் மூன்றாவது இடத்திற்குப் போவார் என்பதே களத்தின் நிலவரமாக இருக்கிறது.
விவேகானந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தூத்துக்குடி: வெற்றிக் கனி பறிக்கும் கனிமொழி… வெகுதூரத்தில் எதிர்க்கட்சிகள்!
சேலம்: செல்வகணபதியின் பாசவலையில் அதிமுகவினர்… எடப்பாடி ஷாக்! மாம்பழத்தின் நிலை என்ன?
“அதிமுக எப்படியாவது 2ஆவது இடத்துக்கு வந்துருங்க… பிஜேபிய விட்றாதீங்க…” : எ.வ.வேலு பிரச்சாரம்!