தூத்துக்குடி: வெற்றிக் கனி பறிக்கும் கனிமொழி… வெகுதூரத்தில் எதிர்க்கட்சிகள்!
14 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட உப்புக் காற்று வீசும் தூத்துக்குடி தொகுதியில் இப்போது தேர்தல் சூடு பறக்கத் தொடங்கியுள்ளது. திமுக சார்பில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் சிட்டிங் எம்.பியுமான கனிமொழி கருணாநிதி களமிறங்கியுள்ளார். இதனால் இத்தொகுதி தமிழ்நாடு முழுதும் உற்று கவனிக்கப்படும் ஒரு தொகுதியாக உருப்பெற்றுள்ளது.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் அக்கா மகன் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரொவீனா ரூத் ஜென் களமிறங்கியுள்ளார்.
சிறுபான்மையினர்களின் வாக்கு சதவீதம்
தூத்துக்குடி தொகுதியில் கிட்டத்தட்ட 21% சதவீதத்திற்கும் மேல் கிறித்தவர்கள் மற்றும் இசுலாமியர்களின் வாக்குகள் இருக்கின்றன. 2011 மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படையில் கிறித்தவர்கள் 16.68% சதவீதமும், இசுலாமியர்கள் 4.61% சதவீதமும் இருக்கிறார்கள். ஐந்தில் ஒரு பங்கு வாக்குகள் சிறுபான்மையினரின் வாக்குகள் இருப்பதால் இத்தொகுதியின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் சிறுபான்மையினரின் வாக்குகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.
நாடார் சமூக வேட்பாளர்கள்
சமூகங்களைப் பொறுத்தவரை நாடார், தேவேந்திரகுல வேளாளர்கள், மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். நாடார் சமூகத்தினரே அறுதிப் பெரும்பான்மையாக இருப்பதால் அவர்களின் வாக்குகளைக் குறிவைத்தே திமுக, அதிமுக, தமாகா, நாம் தமிழர் என முக்கிய கட்சிகள் அனைத்தும் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக அறிவித்துள்ளன.
தூத்துக்குடியின் சட்டமன்றத் தொகுதிகள்
இத்தொகுதி 2008க்கு முன்புவரை திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியாக இருந்து, பின்னர் தூத்துக்குடி மக்களவை தொகுதியாக மாற்றம் பெற்றது. தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி என்பது விளாத்திக்குளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம் (தனி), கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தொகுதியாகும்.
சமூக வாரியான வாக்குகள்
விளாத்திகுளம் மற்றும் கோவில்பட்டி இரண்டு தொகுதிகளிலும் நாயுடு மற்றும் ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். இதனால்தான் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக இரண்டு கூட்டணிகளிலும் ரெட்டியார் மற்றும் நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே இங்கு வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டார்கள்.
ஒட்டப்பிடாரம் தொகுதியில் 30% சதவீதத்திற்கு மேல் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே இருக்கிறார்கள். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இத்தொகுதியில் 6 முறை போட்டியிட்டிருக்கிறார். இரண்டு முறை எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார்.
ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்களே பெரும்பான்மையாக இருக்கின்றனர். 2021 சட்டமன்றத் தேர்தலில் இந்த 3 தொகுதிகளிலும் திமுக, அதிமுக இரண்டு கூட்டணிகளிலும் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் மீனவர்கள், தேவர், பிள்ளைமார், யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் இருக்கிறார்கள்.
நீண்ட காலமாக கையில் வைத்திருந்த காங்கிரஸ்
தூத்துக்குடி தொகுதி என்பது நீண்ட காலம் காங்கிரசின் கைகளிலேயே இருந்துள்ளது. 1962 இல் காங்கிரஸ் சார்பில் டி.டி.கிருஷ்ணமாச்சாரி இத்தொகுதியில் வெற்றி பெற்றார். அதன்பிறகு 1977இல் துவங்கி தொடர்ச்சியாக 6 முறை இத்தொகுதியில் காங்கிரஸ் வென்றுள்ளது. காங்கிரசின் தனுஷ்கோடி ஆதித்தன் 4 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார். 1998 இல் அதிமுக கைகளுக்கு தொகுதி சென்றது. நடிகர் ராமராஜன் அதிமுக சார்பில் நின்று வெற்றி பெற்றார். 1999க்குப் பிறகு 2014 மக்களவை தேர்தலில் மட்டும் அதிமுக இத்தொகுதியில் வென்றிருக்கிறது. மற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுகவே வெற்றி பெற்றிருக்கிறது.
2019 & 2021 தேர்தல்கள் ஒப்பீடு
2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி, அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட அதிமுக- பாஜக கூட்டணி வேட்பாளரான தமிழிசை செளந்தர்ராஜனை 3,47,209 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் கனிமொழி பெற்ற வாக்குகளின் விவரங்களை, 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் 6 வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அந்த இரண்டு ஆண்டுகளில் தொகுதியில் நடந்த சில மாற்றங்களை கவனிக்க முடியும்.
- முதலில் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி.
2019 பாராளுமன்றத் தேர்தலில் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் கனிமொழி பாஜகவின் தமிழிசை செளந்தர்ராஜனை விட 22,727 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் வி.மார்க்கண்டேயன் அதிமுக வேட்பாளரைக் காட்டிலும் 38,549 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசம் அதிகரித்திருப்பதை பார்க்க முடிகிறது.
- இரண்டாவதாக தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளில் கனிமொழி 76,107 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.
தற்போது தமாகா வேட்பாளராக களமிறங்கியிருக்கும் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது திமுக வேட்பாளர் கீதா ஜீவன், தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலனை 50,310 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
இங்கு 2 ஆண்டுகளில் திமுகவின் வாக்கு வித்தியாசம் குறைந்ததாக தெரிந்தாலும் பெரிய அளவிற்கு மாறிவிடவில்லை.
- மூன்றாவதாக திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி.
2019இல் அதிமுக வேட்பாளரை விட 64,156 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார் கனிமொழி.
2021 இல் திருச்செந்தூர் வேட்பாளராக தற்போது அமைச்சராக உள்ள அனிதா ராதாகிருஷ்ணன் களமிறங்கி வெற்றி பெற்றார். ஆனால் வாக்கு வித்தியாசம் 25,263 ஆகக் குறைந்தது.
- நான்காவதாக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி.
இத்தொகுதியில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு வித்தியாசமாக 59,389 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தது திமுக.
2021 சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சண்முகநாதனை 17,372 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
இத்தொகுதியில் திமுக கூட்டணி பெற்ற வாக்கு வித்தியாசம் குறைந்திருப்பதை பார்க்க முடிகிறது.
- ஐந்தாவதாக ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி
2019 இல் 65,581 வாக்குகள் அதிகம் பெற்ற திமுக, 2021 சட்டமன்றத் தேர்தலில் 8510 வாக்குகளே அதிகம் பெற்றது. இரண்டு ஆண்டுகளில் திமுகவின் வாக்குகள் பல மடங்கு குறைந்திருக்கிறது.
- ஆறாவதாக கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி
2019 இல் அதிமுகவை விட திமுக 57,896 வாக்குகள் அதிகம் பெற்றது.
2021 இல் இத்தொகுதி திமுக கூட்டணியில் சி.பி.எம் கட்சிக்கு கொடுக்கப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ இங்கு வெற்றி பெற்றார். டிடிவி தினகரன் இரண்டாம் இடம் பிடித்தார். திமுக கூட்டணி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
எனவே இத்தொகுதியில் திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் கடுமையாக சரிந்ததை 2 ஆண்டுகளில் பார்க்க முடிந்தது.
திமுக வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசங்கள் குறைந்திருந்தாலும், 2021 சட்டமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளில் திமுக கூட்டணியே வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. எனவே இத்தொகுதியில் திமுக கூட்டணி பலத்துடன் இருப்பதைப் பார்க்க முடிகிறது.
அக்கா கனிமொழியின் பலம்
கனிமொழியைப் பொறுத்தவரை தமிழ்நாட்டிற்கே அறிந்த முகம், கலைஞரின் மகள் இதெல்லாம் அவரது மிகப்பெரிய ப்ளஸ். பாராளுமன்றத்திலும் சிறந்த பாராளுமன்றவாதியாக செயல்பட்டிருக்கிறார். தூத்துக்குடி பெரு வெள்ளத்தின்போது களத்தில் இறங்கி கனிமொழி செய்த வேலைகள் அவருக்கு தொகுதியில் நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. ‘அக்கா, அக்கா’ என்று கட்சியினரும், மக்களும் இயல்பான அன்போடு அவரை அழைக்கிறார்கள்.
மேலும் மத்திய அரசாங்கம் தூத்துக்குடி வெள்ளத்திற்கு 1 ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று பாஜகவிற்கு எதிரான தீவிரமான பிரச்சாரத்தை தொகுதி முழுக்க மேற்கொண்டு வருகிறார்கள் திமுகவினர். கூட்டணி பலம், கட்சியின் பலம், தனது தனிப்பட்ட ஆளுமையின் பலம் என பெரும்பலத்துடன் கனிமொழி களமிறங்கியிருக்கிறார்.
எனது இரண்டாவது தாய் வீடு தூத்துக்குடிதான் என்று இப்போது பிரச்சாரத்தில் சொல்லிவரும் கனிமொழி, கடந்த ஐந்து ஆண்டுகளாக அப்படித்தான் நடந்திருக்கிறார். இப்போது பிரச்சாரத்தில் அவர், ‘எனது இரண்டாவது தாய் வீடு’ என்று சொல்லும்போது மக்கள் கைதட்டி அதை உறுதிப்படுத்துகிறார்கள்.
மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தன் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செய்த திட்டங்களை பட்டியல் போட்டு வாசித்து வருகிறார் கனிமொழி. அதுவும் எம்பி ஃபண்ட் தீர்ந்து விட்ட நிலையில் என்.ஆர். இளங்கோ போன்ற திமுக ராஜ்யசபா உறுப்பினர்களிடம் இருந்து நிதி வாங்கி அதை தூத்துக்குடி திட்டப் பணிகளுக்கு செலவிட்டுள்ளார்.
வெள்ள மீட்பு நடவடிக்கைகள், ஏர்போர்ட் விரிவாக்கம், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் கொண்டுவந்தது, 16 ஆயிரம் கோடியில் புதிய வின் ஃபாஸ்ட் கார் தொழிற்சாலை என தூத்துக்குடி தொகுதிக்கு கனிமொழி செய்துள்ள நன்மைகளும், அவரது பொது இமேஜும் பெரும் சாதகமாக உள்ளன.
மேலும் திமுக அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் இருவரும் தொகுதி முழுக்க சுற்றிச் சுழன்று வேலை பார்க்கிறார்கள். இவர்களுடன் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமியும் வேலை செய்து வருகிறார்.
ஆளில்லாமல் அக்கா மகனை இறக்கிய அதிமுக சண்முகநாதன்
அதிமுக சார்பில் போட்டியிடும் சிவசாமி வேலுமணி முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் அக்கா மகன் என்ற அடையாளத்துடன் களமிறங்கியுள்ளார். இவர் சென்னை வடபழனியில் புத்தூர் கட்டு கட்டும் சிகிச்சை மையத்தை நடத்தி வருகிறார். சென்னை மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலராக போட்டியிட்டு தோல்வியடைந்தவர். அதிமுகவின் கட்சி பலம், இரட்டை இலை சின்னம் இவற்றை தனது பலமாகக் கொண்டு திமுகவின் மீதான அதிருப்தியை அறுவடை செய்ய முடியும் என்று நம்பிக்கையோடு களத்தில் குதித்திருக்கிறார். தூத்துக்குடியில் போட்டியிட கட்சியின் மூத்த நிர்வாகிகள் யாரும் விருப்பம் காட்டாததால் சண்முகநாதன் தன் அக்கா மகனை சென்னையில் இருந்து கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். ஆனால் கனிமொழியோடு ஒப்பிடும்போது அதிமுக வேட்பாளர் ரொம்ப பின்னால் இருக்கிறார் என்று அதிமுகவினரே கூறுகிறார்கள்.
தமாகாவை தவிக்க விட்ட பாஜக
பாஜக கூட்டணியில் முதலில் தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக பாஜகவின் நயினார் நாகேந்திரன் பெயர் அறிவிக்கப்பட்டது. கனிமொழிக்கு எதிராக நயினாரா என்ற பேச்சு சில நிமிடங்களே நீடித்தது. அதற்குள் அவர் திருநெல்வேலி வேட்பாளராக மாற்றி அறிவிக்கப்பட்டார். பின் தூத்துக்குடி தொகுதி ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் தூத்துக்குடி சட்டமன்றத் தேர்தலில் அமைச்சர் கீதா ஜீவனை எதிர்த்துப் போட்டியிட்டு 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தவர். அதுவும் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டும் இவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருந்தார். தற்போது கூட்டணியில் அதிமுக இல்லாதது தமாகாவிற்கு இன்னும் பின்னடைவே. மேலும் தமிழ் மாநில காங்கிரசுக்கு தூத்துக்குடி தொகுதியில் பெரிய கட்டமைப்பு எதுவும் கிடையாது. தமாகா வேட்பாளரின் பிரச்சார நடமாட்டமே ஆங்காங்கேதான் இருக்கிறது.
நாம் தமிழர் கட்சியின் நிலை என்ன?
நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை 2019 இல் 49,222 வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆனால் 2021 இல் தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் 1,02,160 ஆக வளர்ச்சி கண்டது. இதனால் தங்களுக்கு மீண்டும் ஏறுமுகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நாம் தமிழர் கட்சி களமிறங்கியுள்ளது.
தூத்துக்குடி தொகுதியைப் பொறுத்தவரை கனிமொழியே மீண்டும் முந்துகிறார் எனபதே தற்போதைய கள நிலவரம். அதிமுக, தமாகா வேட்பாளர்களின் செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும்போது கனிமொழியின் வெற்றி வித்தியாசத்துக்காகத்தான் ஜூன் 4 வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது என்கிறார்கள் தொகுதி மக்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாக்டர் கிருஷ்ணசாமி Vs ஜான் பாண்டியன்…தென்காசியைக் கைப்பற்றப்போவது யார்?
தங்கர்பச்சானுக்கு சீட்டு எடுத்துக் கொடுத்த கிளி சோதிடர் கைது… அன்புமணி கண்டனம்!
பேடிஎம் தெரியும் பே பிஎம் திட்டம் தெரியுமா? – பிடிஆர் புது விளக்கம்!