குழந்தையின் வழியே மலரும் காதல்!
தெலுங்கு திரையுலகில் இருந்து அவ்வப்போது காதல் ரசம் பிழியப் பிழியச் சில படங்கள் வெளிவரும். அவற்றில் முக்கால்வாசி திரைக்கதைகள் நாயகனை ‘பிளேபாய்’ ஆக முன்னிறுத்தும். தொண்ணூறுகளில் நாகார்ஜுனா, வெங்கடேஷ், சுமன் போன்றவர்கள் அத்தகைய படங்களைத் தந்து வந்தார்கள். இப்போதிருக்கும் நாயகர்களில் அதனைத் தனதாக்கி இருக்கிறார் சர்வானந்த். அவரது நடிப்பில் தற்போது ‘மனமே’ வெளியாகியிருக்கிறது. இதில் அவரது ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இதனை ஸ்ரீராம் ஆதித்யா இயக்கியிருக்கிறார்.
இப்படம் எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது?
குழந்தைக் காவலர்கள்!
லண்டனில் முதுகலை படிப்பை மேற்கொண்டு வருபவர் விக்ரம் (சர்வானந்த்). அவரது நண்பர் அனுராக் (த்ரிகன்). ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து, படித்து, லண்டனில் சொந்தமாக ஒரு ரெஸ்டாரண்டை நடத்தி வருகிறார். அனுராக் மனைவி சாந்தி. இத்தம்பதியருக்கு குஷி என்ற இரண்டு வயது குழந்தை இருக்கிறது. இவர்களது காதல் திருமணத்திற்குச் சாந்தியின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆதலால், அவர்களோடு இருவருக்கும் தொடர்பில்லை.
தோழி சுபத்ராவின் (கீர்த்தி ஷெட்டி) நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, குஷியுடன் சாந்தி – அனுராக் தம்பதி ஹைதராபாத் வருகின்றனர். வந்த இடத்தில் ஒரு விபத்தில் சிக்கி இருவரும் மரணமடைகின்றனர்.
செய்தி கேட்டு, விழுந்தடித்துக்கொண்டு லண்டனில் இருந்து வருகிறார் விக்ரம். சுபத்ராவும் மருத்துவமனைக்கு விரைகிறார். அங்கு இருவருமே குழந்தை குஷியைக் காண்கின்றனர்.
குஷியை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்ப்பதில் விக்ரமின் தந்தைக்கு விருப்பமில்லை. ஆனால், சாந்தியின் பெற்றோர் மட்டுமே அதற்கு உரிமை கொண்டாட முடியும் என்கிறார் பிரிட்டன் தூதரக அதிகாரி (தணிகல பரணி). அவர்களோ எந்தப் பதிலும் தெரிவிப்பதாக இல்லை.
இறுதியாக, ’விக்ரமும் சுபத்ராவும் சேர்ந்து 4 மாதங்கள் குஷியைப் பார்த்துக்கொள்ளட்டும்; அதன்பிறகு நடைபெறும் ஆய்வின் முடிவில் குழந்தையை யாரிடம் ஒப்படைப்பது என்று முடிவு செய்யப்படும்’ என்கிறார் அந்த தூதரக அதிகாரி.
விக்ரமுக்கு அதில் கொஞ்சமும் விருப்பமில்லை. ஆனால், அவரது தந்தை அதில் விடாப்பிடியாக இருக்கிறார். ‘அனுராக் போலவே குஷியும் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர வேண்டுமா’ என்கிறார். வேண்டாவெறுப்பாக குஷி, சுபத்ராவுடன் அனுராக் – சாந்தி வாழ்ந்த வீட்டுக்குச் செல்கிறார் விக்ரம்.
எந்நேரமும் மது போதை, பெண் சகவாசம் என்று வாழும் விக்ரமுக்கு, குஷியுடன் நேரம் செலவழிப்பது வெறுப்பை வாரி வழங்குகிறது. அதேநேரத்தில், சுபத்ரா மீதும் காதல் பிறக்கிறது. சுபத்ராவுக்குத் திருமணம் நிச்சயமான தகவல் தெரிந்தும் ‘கூல்’ ஆக இருக்கும் விக்ரம், மாப்பிள்ளை கார்த்திக் (சிவா கந்துகுரி) நேராக லண்டனுக்கு வந்ததும் டென்ஷன் ஆகிறார்.
அதன்பிறகு என்னவானது? குஷி உடன் வாழும் சுபத்ரா – விக்ரம் இருவரும் வாழ்வில் ஒன்றானார்களா? பெற்றோரை இழந்த அக்குழந்தைக்கு இருவரும் தாய் தந்தையராகத் தெரிந்தார்களா என்று சொல்கிறது ‘மனமே’வின் மீதி.
இந்தப் படத்தில் குஷி எனும் குழந்தையின் காவலர்களாக சுபத்ரா – விக்ரம் வந்து போகின்றனர். குழந்தை பராமரிப்பு எளிதல்ல என்று சொல்வதோடு நின்றுவிடாமல், அந்த கஷ்டத்தை எதிர்கொள்ளவே இந்த உலகில் பெரும்பாலான மனிதர்கள் விரும்புகின்றனர் என்ற உண்மையையும் உரக்கச் சொல்கிறது இப்படம்.
கூடவே, அக்குழந்தையின் வழியே ஒன்றுக்கொன்று நேரெதிர் திசைகளில் வாழும் சுபத்ரா – விக்ரம் இடையே காதல் பிணைப்பு உருவாவதாகக் காட்டுகிறது. அதுவே ‘மனமே’ படத்தின் யுஎஸ்பி.
ஜாலி கேலி பயணம்!
எந்தவொரு சீரியஸ் விஷயத்திற்கும் விட்டேத்தியாகப் பதில் சொல்லும்போது, ’சிரிக்கவே மாட்டார்’ என்று சொல்லப்படும் நபர் கூட விழுந்து விழுந்து சிரிப்பார். அந்த பார்முலாவை வைத்துக்கொண்டு, விக்ரம் எனும் நாயக பாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீராம் ஆதித்யா. அதற்கேற்றவாறு ஒன்லைனர்களை அள்ளி தெளித்திருக்கிறது வசனம் எழுதிய கார்த்திக் – அர்ஜுன் இணை.
திரையில் ஒரு ஸ்டைலிஷான ஆளாகத் தன்னைக் காட்டிக்கொள்ள நிறையவே மெனக்கெட்டிருக்கிறார் சர்வானந்த். அதில் நமக்கு எந்த வருத்தமும் இல்லை. அதேநேரத்தில் நன்றாகவும் நடித்திருக்கிறார்.
நாயகி கீர்த்தியும் கூட அழகுப்பதுமையாக திரையில் வந்து போயிருக்கிறார். உடம்பு ஒரு சுற்று கூடியிருக்கிறது என்பதைத் தவிர, அவரை ரசிப்பதில் நமக்கு எந்த மனக்கஷ்டமும் இல்லை.
இவர்கள் தவிர்த்து வெண்ணிலா கிஷோர், சீரத் கபூர், ராகுல் ரவீந்திரன், ராகுல் ராமகிருஷ்ணா, ஆயிஷா கான், சச்சின் கடேகர், துளசி, முகேஷ் ரிஷி, சீதா, விஜயகுமார், ஜரினா வஹாப், த்ரிகன், சிவா கந்துகுரி என்று பெரும்பட்டாளமே இதில் நடித்துள்ளது.
நாயகனின் நண்பராக வந்து அவ்வப்போது ‘காமெடி பஞ்ச்’ அடிப்பவரும், ஆயிஷாவின் தந்தையாக வருபவரும் நம்மைச் சிரிக்க வைக்கின்றனர்.
இவர்கள் அனைவரையும் தாண்டி இந்தப் படத்தை நாம் பார்க்கக் காரணமாக இருப்பது குஷியாக நடித்துள்ள விக்ரம் ஆதித்யா. நீண்ட, சுருட்டை முடியும், பெரிய விழிகளுமாக அக்குழந்தை கேமிராவை நோக்கும்போதெல்லாம், அள்ளியெடுத்து கொஞ்சத் தோன்றுகிறது.
ஹேஷம் அப்துல் வஹாப் இசையில் பாடல்கள் சட்டென்று ரசிக்க வைக்கின்றன. வெவ்வேறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளுக்கேற்ப, பின்னணி இசை வழியே அதன் வீரியத்தை அதிகப்படுத்த உதவியிருக்கிறார்.
விஷ்ணு சர்மா – ஞானசேகர் ஒளிப்பதிவு ‘கலர்ஃபுல்’லான காட்சியனுபவத்திற்கு உத்தரவாதம் தந்திருக்கிறது. பல காட்சிகளில் கேமிரா நகர்வு நம்மைப் பிரமிப்புக்கு உள்ளாக்குகிற்து.
பிரவீன் புடியின் படத்தொகுப்பு, ரொம்பவே ஸ்லோமோஷனில் நகர்ந்திருக்க வேண்டிய கதையை வேகமெடுக்க வைத்திருக்கிறது.
ஜோனி ஷெய்க்கின் கலை வடிவமைப்பானது, படம் முழுக்கப் பல வண்ணங்கள் இறைந்து கிடப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
இன்னும் ஸ்டைலிங், காஸ்ட்யூம் டிசைன், விஎஃப்எக்ஸ், டிஐம், நடனம், சண்டைக்காட்சி வடிவமைப்பு, ஒலி வடிவமைப்பு என்று இதில் சிலாகிக்கப் பல விஷயங்கள் உண்டு.
இந்தப் படத்தை இரண்டாவது முறையாகப் பார்க்கையில், திரைக்கதையில் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட விஷயங்கள் தெளிவாகத் தென்படும். இயக்குனர் ஸ்ரீராம் ஆதித்யா அவற்றை மறுவடிவமைப்பு செய்யத் தவறியிருக்கிறார்.
ஆதரவற்றவராக வளர்ந்தவர் அனுராக்; சாந்தியின் பெற்றோர் கட்டுப்பெட்டித்தனமானவர்கள்; விக்ரம் ஒரு பெண் பித்தர்; சுபத்ராவோ பெண்களோ பொறாமைப்படும் அழகும் குணமும் நிறைந்தவர்; இப்படி ஒரு மசாலா படத்திற்குத் தேவையான ‘டிபிகல்’ பாத்திர வார்ப்பு இதிலுண்டு.
கவர்ச்சிகரமாகச் சில பெண் பாத்திரங்கள் காட்டப்பட்டபோதும், சண்டைக்காட்சிகளில் பெரிதாக வன்முறை இல்லை. அதுவே, இப்படத்தை மற்றவற்றில் இருந்து வேறுபடுத்துகிறது. காதலுடன் கவித்துவமான தருணங்களையும் ‘கலர்ஃபுல்’லாக காட்டுகிறது. ஜாலியும் கேலியும் நிறைந்த ஒரு சுற்றுலா பயணம் போல, நம்மை உணரச் செய்கிறது ‘மனமே’ திரைக்கதை.
புதிய ‘ஸ்கிரிப்ட்’ அல்ல!
புதுமையை விரும்பும் ஒருவர் ‘மனமே’ பார்த்துவிட்டு தலையைப் பிய்த்துக்கொள்ள நேரலாம். ஏனென்றால், இப்படத்தில் புதிதென்று எதுவுமில்லை. அதேநேரத்தில், சர்வானந்த் ரசிகர்கள் விரும்பும் வகையிலும், சாதாரண மக்களை ஈர்க்கும் வகையிலும் இப்படம் அமைந்துள்ளது.
‘மனமே’ ஸ்கிரிப்ட் புதியதொரு அனுபவத்தை நிச்சயம் வழங்காது. அதேநேரத்தில் கொஞ்சம் நெகிழ்வான, திரையைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளும் வகையிலான ஒரு திரைக்கதையைக் கொண்டிருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளோ, பதறச் செய்யும் கொலைக்காட்சிகளோ இல்லாமல், ஒரு ‘சிம்பிளான்’ காதல், சென்டிமெண்ட், நகைச்சுவை படம் பார்த்தால் போதுமென்பவர்களை நிச்சயம் ‘மனமே’ திருப்திப்படுத்தும்..!
உதயசங்கரன் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: டிரை ஃப்ரூட்ஸ் கிரிஸ்ப்பி!
டிஜிட்டல் திண்ணை: தமிழிசைக்கு எதிராக அண்ணாமலையின் டெல்லி மூவ்!
துப்பாக்கி ரீ-ரிலீஸ்: வைரலாகும் விஜய்யின் வாழைப்பழ காமெடி வீடியோ!