டிஜிட்டல் திண்ணை: தமிழிசைக்கு எதிராக அண்ணாமலையின் டெல்லி மூவ்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு பாஜகவில் நிலவிவரும் கோஷ்டி பூசல்கள் சமூகத் தளங்களில் பகிரங்கமாக வெடித்து வருகிற ஸ்க்ரீன்ஷாட்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. எனினும்  தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சராக வேண்டும் என அண்ணாமலை, தமிழிசை ஆகியோர் செய்த லாபிகளும் பலன் அளிக்கவில்லை.

இதற்கிடையே அக்கட்சியின் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கிய நிர்வாகிகள் இடையே தோல்விக்கான காரணம் பற்றிய கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு பாஜகவில் மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்தே அவரது அணுகுமுறையில் விருப்பம் இல்லாதபோதும் பல முக்கிய சீனியர்கள் குறிப்பாக பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட சீனியர்கள் அண்ணாமலை மீதான தங்களது அதிருப்தியை வெளிப்படையாக காட்டியதில்லை.

ஆனால் தெலுங்கானா ஆளுநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டு தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பெற்ற டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநில தலைவர் அண்ணாமலையை பகிரங்கமாக விமர்சிக்க தொடங்கி இருக்கிறார்.

இதை மையமாக வைத்து அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் தமிழிசை ஆதரவாளர்களுக்கும் இடையே சமூக தளங்களில் வார்த்தை போர் தடித்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்னர், தான் போட்டியிட்ட தென் சென்னை தொகுதியில் மக்கள் தொடர்பு அலுவலகம் திறந்த தமிழிசை, அந்த விழாவில் செய்தியாளர்களிடம் பேசும்போது, திமுகவினர் தன்னை உருவ கேலி செய்து வருவதாக கண்டித்தார். அதோடு, ’உட்கட்சியிலே இருக்கக்கூடிய இணையதள வாசிகளும் இந்த வேலையை செய்கிறார்கள் அவர்களுக்கும் நான் எச்சரிக்கை விடுக்கிறேன்’ என்று தமிழிசை ஆவேசமாக கூறினார். அந்த உட்கட்சி இணையதளவாசிகள் என தமிழிசை சொன்னது அண்ணாமலையின் ஆதரவாளர்களான வார் ரூம் குழுவினரைதான்.

மேலும் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் தமிழிசை, ’நான் மாநில தலைவராக இருந்தபோது குற்ற பின்னணி உடையவர்களை கட்சியில் சேர்ப்பதற்கு தடை விதித்தேன். கட்சியில் சேர வருபவர்களை சேர்ப்பதற்கு கட்டுப்பாடுகள் வைத்திருந்தேன். ஆனால் இப்போது பல்வேறு மாவட்டங்களில் குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் நிர்வாகிகளாக இருப்பது கவலை தருகிறது’ என்று அண்ணாமலையை நேரடியாகவே சாடியிருந்தார்.

தமிழிசையின் இந்த பேட்டியை குறிப்பிட்டு அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான திருச்சி சூர்யா, ’உங்களது ஆதரவாளரான எல். முருகன் மாநில தலைவராக இருந்தபோதுதான் குற்ற பின்னணி உடையவர்கள் பாஜகவில் அதிகமாக சேர்ந்தார்கள். என்னிடம் ஆதாரம் இருக்கிறது வெளியிடட்டுமா’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அண்ணாமலைக்கு ஆதரவாகவும் தமிழிசைக்கு ஆதரவாகவும் பல்வேறு கருத்துக்கள் வரிசை கட்டி விழுந்து கொண்டிருக்கின்றன.

இதே போல பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கல்யாணராமன் அண்ணாமலை மீது தேர்தல் முடிவுகள் தொடர்பான சரமாரியான புகார்களை பகிரங்கமாக முன்வைத்து வருகிறார்
’அண்ணாமலை பாஜக தலைவர் அலுவலகத்தை முறைகேடாக பயன்படுத்தி செல்வம் குவித்தார். அவர் அந்த முறைகேடாக சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி, சமூக ஊடகங்கள் மற்றும் சேனல்களில் செல்வாக்கு மிக்க நபர்களை விலைக்கு வாங்கி, தமிழ்நாட்டின் மற்ற பாஜக தலைவர்களை வீழ்த்தி, அவர்களின் இமேஜைக் குறைத்து, தன்னை ஒரு ஹீரோவாகக் காட்டிக் கொண்டார். ராகவன் நடத்தப்பட்ட விதம் இதற்கு உதாரணம்.

வார் ரூம் குழு மூலமாக தமிழக பாஜகவில் ஏதோ பெரிய முன்னேற்றம் நிகழ்ந்துள்ளதைப் போல பொய்களை பரப்புகிறார். மற்ற மாநிலங்களில் பாஜக தோற்றதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் பாஜக தோல்விக்கு அண்ணாமலை மட்டும்தான் காரணம்’ என்று கடுமையாக சாடினார் கல்யாணராமன்.

இந்த நிலையில் டெல்லியில் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி. எல் .சந்தோஷை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,

’தமிழகத்தில் தேசிய தலைமையால் அங்கீகரிக்கப்பட்ட மாநில தலைமைக்கு எதிராக டாக்டர் தமிழிசை, கல்யாணராமன் போன்றவர்கள் பகிரங்கமாக புகார் தெரிவித்து வருகிறார்கள்.
விமர்சனங்களை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் ஊடகங்களில் தெரிவித்து வருகிறார்கள். எனவே இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகார் தெரிவித்திருக்கிறார்.

Image

இதற்கிடையே அண்ணாமலைக்கு எதிராக இதுவரை வாய் திறக்காமல் மௌனமாக இருந்து வந்த பல்வேறு சீனியர்கள் தமிழிசைக்கு போன் போட்டு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ’இத்தனை நாள் நாங்கள் எப்படி வெளிப்படுத்துவது என்று இருந்தோம். நீங்கள் இன்று போட்டு உடைத்து விட்டீர்கள்’ என்று தமிழிசையிடம் அவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ்நாடு பாஜக வளர்ந்து விட்டது என்று அண்ணாமலை சொல்லி வரும் நிலையில் பாஜகவுக்குள் உட்கட்சி பூசல்தான் தொடர்ந்து வளர்ந்து வருகிறது” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

 

சிறுத்தைய விட இதான் பயங்கரம் : அப்டேட் குமாரு

திமுக நாடாளுமன்றக் குழு தலைவராக கனிமொழி நியமனம்!

+1
5
+1
14
+1
0
+1
8
+1
7
+1
6
+1
7