டாடா சன்ஸ் நிறுவனத்தில் தங்களிடம் உள்ள 18.37 சதவீத பங்குகளை பணமாக்கும் திட்டத்தை ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமம் மீண்டும் பரிசீலித்து வருகிறது. இந்தப் பங்குகளின் மதிப்பு சுமார் ரூ.2.3 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பங்கு விற்பனைக்கு புதிய சிக்கல்
டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும் என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நிலைப்பாடு இந்த விவகாரத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தை ‘Upper Layer’ NBFC விதிமுறைகளின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தொடரும் நிலையில், பங்குகளை எப்போது, எந்த முறையில் பணமாக்குவது என்பது குறித்து SP குழுமம் கணக்கிட்டு வருகிறது.
ரூ.60,000 கோடி கடன் சுமை
ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்துக்கு கணிசமான கடன் சுமை இருப்பதால், டாடா சன்ஸ் பங்குகள் அதன் முக்கியமான சொத்துகளில் ஒன்றாக உள்ளன. குழுமத்தின் கடன் சுமார் ரூ.60,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக டாடா சன்ஸ் பங்குகளில் ஒரு பகுதியை விற்பனை செய்து நிதி திரட்டுவது நீண்ட காலமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், இரண்டு ஆண்டுகளில் சுமார் ரூ.25,000 கோடியை திரட்டும் வகையில் பங்குகளில் ஒரு பகுதியை பணமாக்கும் திட்டமும் முன்வைக்கப்பட்டிருந்தது.
IPO வந்தால் மாறும் கணக்கு
டாடா சன்ஸ் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டால், SP குழுமத்தின் வசம் இருக்கும் பங்குகளுக்கு வெளிப்படையான சந்தை மதிப்பு கிடைக்கும். இதனால் பங்குகளை விற்பது அல்லது அவற்றை அடிப்படையாகக் கொண்டு நிதி திரட்டுவது எளிதாகலாம்.
இதனிடையே, டாடா சன்ஸ் நிறுவனத்தின் சாத்தியமான IPO மதிப்பு ரூ.9 லட்சம் கோடி முதல் ரூ.12.5 லட்சம் கோடி வரை இருக்கலாம் என முதலீட்டு வங்கியாளர்கள் மற்றும் மதிப்பீட்டு நிபுணர்கள் கணித்துள்ளனர்.
