வருமான வரிக் கணக்கு (ITR) தாக்கல் செய்த பிறகு, சிலருக்கு வருமான வரித்துறையிலிருந்து Section 143(1) Intimation என்ற நோட்டீஸ் வரலாம்.
இதில் கூடுதல் வரி செலுத்த வேண்டும் (Tax Demand) என்று குறிப்பிடப்பட்டிருந்தால், அதை அலட்சியப்படுத்தக் கூடாது.
நோட்டீஸைப் பெற்ற 30 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். இல்லையெனில், வருமான வரிச் சட்டத்தின்படி ‘Assessee in Default’ எனக் கருதப்பட்டு, வட்டி மற்றும் வரி வசூல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது.
Section 143(1) நோட்டீஸ் என்றால் என்ன?
ITR தாக்கல் செய்யப்பட்ட பிறகு, பெங்களூருவில் உள்ள மத்திய செயலாக்க மையம் (CPC) உங்கள் கணக்கைச் சரிபார்க்கும்.
நீங்கள் அளித்த வருமானம், கழிவுகள், செலுத்திய வரி மற்றும் துறையின் பதிவுகள் ஆகியவற்றை ஒப்பிட்டு, அதன் முடிவாக Section 143(1) Intimation அனுப்பப்படுகிறது.
இதில் மூன்று முடிவுகளில் ஒன்று இருக்கும். உங்கள் கணக்கு ஏற்கப்படலாம், வரி திருப்பித் தொகை (Refund) கிடைக்கலாம் அல்லது கூடுதல் வரி செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை இருக்கலாம். எனவே, நோட்டீஸை முழுமையாகப் படித்து புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
கூடுதல் வரி கோரிக்கை வந்தால் என்ன செய்ய வேண்டும்?
முதலில், நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை AIS (Annual Information Statement), Form 26AS, TDS விவரங்கள் மற்றும் உங்கள் நிதி ஆவணங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். உண்மையில் கணக்கீட்டில் தவறு ஏற்பட்டிருந்தால், அதற்கான வரியை செலுத்தலாம்.
ஆனால், வரித்துறையின் கணக்கீட்டில் பிழை இருப்பதாக நீங்கள் நினைத்தால், அதை ஏற்காமல் ஆன்லைனில் பதிலளிக்கும் வசதியும் உள்ளது.
தேவையான ஆதாரங்களுடன் உங்கள் விளக்கத்தை சமர்ப்பிக்கலாம். எந்த நிலையிலும் நோட்டீஸுக்கு பதில் அளிக்காமல் விடுவது சரியான முடிவாக இருக்காது.
30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பது ஏன் அவசியம்?
Section 143(1) நோட்டீஸுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பதிலளிக்கவில்லை என்றால், வருமான வரித்துறை உங்களை ‘Assessee in Default’ எனக் கருதி வரி வசூல் நடவடிக்கைகளைத் தொடங்கலாம். மேலும், நிலுவைத் தொகைக்கு கூடுதல் வட்டியும் விதிக்கப்படலாம்.
எனவே, நோட்டீஸ் கிடைத்தவுடன் பதற்றப்படாமல், அதில் உள்ள தகவல்களை சரிபார்த்து, தேவைப்பட்டால் வரி நிபுணரின் ஆலோசனையைப் பெற்று சரியான நடவடிக்கையை எடுப்பது நல்லது.
வருமான வரித்துறையின் மின்-தாக்கல் (e-Filing) தளத்தின் மூலமாகவும் இதற்கான பதிலை சமர்ப்பிக்க முடியும்.
