வீட்டில் ஒரு நாய்க்குட்டி வளர்த்தால்கூட, ஒரு சின்ன பிஸ்கட் கொடுத்தீர்கள் என்றால் அதுவும் நன்றியோடு இருக்கும். அது கூட இல்லாமல் நீங்கள் செய்ததை உதயநிதி சுட்டிக் காட்டுகிறார். அதில் என்ன தப்பு உள்ளது என சசிகலா கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கள் சர்ச்சையை கிளப்பும் வகையில் அமைந்துள்ளன. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தங்களது கருத்துக்களை பொதுக்கூட்டங்களில் முன்வைத்து வருகின்றனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கலை காட்டி, “இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வைக்கப்பட்ட செங்கல்” என்று கூறி பிரச்சாரக் களத்தில் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த முறை, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது சசிகலாவின் காலில் விழுந்த புகைப்படத்தை பிரச்சாரக் கூட்டங்களில் காட்டி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில், “எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது கொரோனா வந்திருந்தால் இவர் கொரோனாவிலேயே போயிருப்பார். பால்டாயில் குடித்ததெல்லாம் பஞ்ச் டயலாக் பேசுகிறார்கள்” என்று விமர்சித்து வருகிறார்.
இதுகுறித்து நேற்று ராஜபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய சசிகலா, உதயநிதி ஸ்டாலின் சொன்னதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பினார்.
கூட்டத்தில் பேசிய சசிகலா:“அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்நாட்டிற்கு உருப்படியாக இருக்கும்படி ஏதாவது பேசுகிறார்களா? ஒருவர் முதலமைச்சராக இருந்தவர், ஒருவர் முதலமைச்சராக இருப்பவர். கடந்த இரண்டு மூன்று நாட்களாக அவர்கள் பிரச்சாரம் செய்வதைப் பார்த்தால், வீணாக சொந்த விஷயங்களைப் பேசி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். வீட்டில் பெரியவர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கும்போது சிறியவர்களுக்கு எதுவும் தெரியாது. அதுபோல், முதலமைச்சராகப் பதவியில் இருந்தவரும், இந்த நிமிடம் வரை முதலமைச்சராகப் பதவியில் இருப்பவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதையெல்லாம் நீங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இது தேர்தல் பிரச்சாரத்திற்கான நேரம். இதில் ஒரு நல்ல முதலமைச்சர், பொறுப்பு வாய்ந்தவர் மக்களுக்கு ‘நாங்கள் இந்த மாதிரியான திட்டங்களை கொண்டு வருவோம்’ என்று ஏதாவது ஒன்றைச் சொல்ல வேண்டும். நீங்கள் செய்யப் போவது இல்லை என்றாலும் அதைச் சொல்ல வேண்டும். ஆனால் அதைச் சொல்லாமல், திமுகவில் சின்னப் பையன் (துணை முதலமைச்சர்) ஒரு படத்தைத் தூக்கிக் காட்டி, ‘முதலமைச்சராகும்போது இங்கு படுத்துக் கிடப்பது யார்? இது கார்பெட் இல்லை, இவர்தான்’ என்று சொல்கிறார். அதற்கு முதலமைச்சராக இருந்தவர், ‘நீ பால்டாயில் குடித்துவிட்டு படுத்திருக்கிறாய்’ என்கிறார். இதுவெல்லாம் மக்களுக்கு தேவையான விஷயமா? இந்த வயதில் இதைப் பேசலாமா? அப்படி என்றால் உங்களுக்கு எப்படி ஆட்சி செய்வது என்று தெரியவில்லை. இரண்டு பேருக்குமே தெரியவில்லை.
இரவு 10 மணிக்குள் பேசி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விதிகளை வைத்துள்ளது. அப்படி இருக்கும்போது, மக்களைப் பார்த்து பேசும்போது என்ன பேச வேண்டுமோ அதைப் பேசாமல், ஏற்கனவே முதலமைச்சராக இருந்தவர் ‘நீங்கள் கொரோனாவிலேயே போயிருக்க வேண்டும்’ என்கிறார். இதுவரை எத்தனையோ தலைவர்கள் முதலமைச்சராக இருந்தவர்கள் யாரும் இவ்வளவு கேவலமாகப் பேச மாட்டார்கள். இதிலிருந்து இவர்கள் நல்ல தரம் வாய்ந்தவர்களாக இல்லை என்பது தெரிகிறது. இவர்கள் எப்படி மக்களை வழி நடத்துவார்கள்? முடியாது.
அந்தச் சின்னப் பையன் சொன்னதும் காட்டியதும் உண்மைதானே? டிவியில் எல்லாம் வந்த விஷயம்தானே? டிவியில் வந்த விஷயத்தைத்தான் அந்தப் பையன் காட்டுகிறார். நீங்கள் அந்தப் பையனை இன்று உயிரோடு இருக்கக் கூடாது என்று சொல்லக்கூடாது. நீங்கள் உங்களைத் திருத்திக் கொண்டு இருந்திருக்க வேண்டும். பதவி கொடுத்தவர்களுக்கு நன்றியோடு இருந்திருக்க வேண்டும். வீட்டில் ஒரு நாய்க்குட்டி வளர்த்தால்கூட, ஒரு சின்ன பிஸ்கட் கொடுத்தீர்கள் என்றால் அதுவும் நன்றியோடு இருக்கும். அது கூட இல்லாமல் நீங்கள் செய்ததை அந்தப் பையன் காட்டுகிறார். அதில் என்ன தப்பு உள்ளது? ஆனால் இதையெல்லாம் தனிப்பட்ட முறையில் ஒரு இடத்தில் பேசிக் கொண்டால் அது வேறு. இப்போது நடப்பது தேர்தல் பிரச்சாரம். இதில் ‘நாங்கள் வந்தால் இந்தத் திட்டங்களைச் செய்வோம்’ என்று சொல்ல வேண்டும். அது போன்ற தலைவர்கள் இப்போது இல்லை” என்று தெரிவித்தார்.
