சென்னை கூடுதல் 6ஆவது நீதிமன்ற நீதிபதி மீது ரவுடி கருக்கா வினோத் செருப்பு வீச முயன்றது நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு கிண்டி ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசியதால் ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதிமன்றம், கருக்கா வினோத்துக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.
இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றின் மீது அடிதடி நடத்தி பெட்ரோல குண்டு வீசியதாக பதியப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஆறாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு கருக்கா வினோத் அழைத்துவரப்பட்டார்.
அவரை நீதிபதி பாண்டியராஜ் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர்.
அப்போது கருக்கா வினோத், ஆளுநர் மாளிகை வழக்கில் தமக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி தனது செருப்பை கழற்றி நீதிபதியை நோக்கி வீச முயன்றார்.
இதை பார்த்து சுதாரித்துக் கொண்ட காவல்துறையினர், கருக்கா வினோத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து நீதிபதி இதுபோன்ற குற்றவாளிகளை நேரடியாக நீதிமன்றத்துக்கு அழைத்து வராமல் காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.
கருக்கா வினோத்தின் செயலால் நீதிமன்றத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
