குளச்சல் அருகே இளைஞருடன் தனிமையில் இருந்த மகளை தந்தை தட்டிக் கேட்டதால் போக்சோவில் புகார் அளிப்பேன் என மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கொத்தனார் தம்பதிக்கு 17 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மகள் 12ம் வகுப்பு படித்து வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் கொத்தனாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறு காரணமாக மனைவி கணவரை பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் கணவர் தனியாக தனது மகளையும், மகனையும் பராமரித்து வந்துள்ளார். கடந்த வாரம் அப்பகுதியில் நடந்த பிரச்சனையில் கொத்தனார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் கைதுக்கு பயந்து கொத்தனார் தலைமறைவாக இருந்துள்ளார்.
இது குறித்த தகவல் அறிந்த மனைவி, மகள் காதலிக்கும் இளைஞரை அழைத்து உணவு வாங்கி கொடுத்து பார்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தந்தைக்கு அடிதடி வழக்கில் ஜாமின் கிடைத்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை உணவு வாங்கி வந்த இளைஞரும், மாணவியும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மாணவியின் தந்தைக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தை விரைந்து வந்து வீட்டின் கதவை தட்டி உள்ளார். அப்போது மகளும், அவரது காதலனும் வெளியே வந்துள்ளனர். இதைப்பார்த்த ஆத்திரத்தில் மகளை கண்டித்த தந்தை இதுகுறித்து மகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவரையும் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது மகள் என்னிடம் அத்துமீறியதாக உன் மீதே போக்சோவில் புகார் கொடுப்பேன் என தந்தையை மிரட்டி உள்ளார். இதனால் மனம் உடைந்த தந்தை மகளை அங்கேயே விட்டுச் சென்றுள்ளார். இதனால் காவல் துறையினர் மாணவியின் தாய்க்கு தகவல் அளித்தனர்.
காவல்நிலையத்திற்கு வந்த தாய் எனக்கு மகளும், இளைஞரும் காதலிப்பது தெரியும். அவர்கள் தவறு செய்யவில்லை. நான்தான் உணவு வாங்கி தரும்படி கூறி அனுப்பினேன் என்று தெரிவித்துள்ளார். பின்னர் மகளை தன்னுடன் அழைத்துச் சென்றார். புகார் எதுவும் கொடுக்கப்படாததால் காவல்துறையினர் பெண்ணுடன் தனிமையில் இருந்த இளைஞரை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
