ADVERTISEMENT

மேகதாது அணை : தமிழக அரசின் மனு தள்ளுபடி ஏன்? கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் வைத்த ‘செக்’ என்ன?

Published On:

| By Kavi

கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டும் திட்டத்திற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்ற மறுத்துவிட்டது. 

கர்நாடாகவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே நீண்ட வருடங்களாக காவிரி நதி நீர் பிரச்சினை இருந்து வருகிறது.  தமிழகத்துக்கு கர்நாடகா உரிய தண்ணீர் திறந்துவிடுவதில்லை. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். 

ADVERTISEMENT

இந்தசூழலில்  காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடகா அரசு திட்டமிட்டு அதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய  நீர்வள ஆணையத்தின் ஒப்புதலை கேட்டது. இதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.  

இந்நிலையில் தமிழக அரசு. மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பதற்காக மத்திய நீர் ஆணையம் (CWC) பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. 

ADVERTISEMENT

இந்த வழக்கு இன்று (நவம்பர்  13) தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்,  நீதிபதிகள் வினோத் சந்திரன் மற்றும் என்.வி.அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ‘மேகதாது அணை கட்டினால் அது தமிழக விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். கர்நாடகா கட்ட திட்டமிட்டுள்ள மேகதாது அணை காரணமாக, கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டிற்குத் தேவையான நீர் வரத்து கடுமையாகப் பாதிக்கப்படும். மொத்தமாக, இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டு விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும்’ என்று வாதம் முன்வைத்தார். 

ADVERTISEMENT

கர்நாடக மாநிலத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் ஆஜராகி,  ‘தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு, ஒரு ‘தவறான நோக்கம் கொண்டது’. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, கர்நாடகா மாநிலம் 177.25 டிஎம்சி நீரைத் தமிழ்நாட்டிற்கு வழங்க கட்டுப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிற்கான நீர் ஒதுக்கீட்டில் எந்தவித பாதிப்பும் ஏற்படாதபட்சத்தில், தேவையான அனுமதிகளைப் பெற்ற பின்னர், நீர்த்தேக்கத் திட்டத்தைத் தொடர கர்நாடகாவுக்கு உரிமை உண்டு. அணை கட்டப்பட்டாலும், தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நீரின் அளவை கர்நாடகா உறுதி செய்யும். எனவே தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று வாதாடினார். 

இரு மாநில வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  “தமிழ்நாடு அரசின் மனு ப்ரீ மெச்சூர்… அதாவது ஆரம்ப கட்டமானது என கூறி தள்ளுபடி செய்தனர். 

மேலும், மத்திய நீர்வள ஆணையத்தின் உத்தரவு என்பது மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு மட்டுமே.  இந்த அறிக்கை  தமிழகம்  மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம்,  காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு போன்ற நிபுணர் குழுக்களின் கருத்துகள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே அங்கீகரிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். 

தொடர்ந்து  உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை வழங்கவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்பதை கர்நாடகாவுக்கு  தெளிவுபடுத்துகிறோம் என்றும் மேகதாது தொடர்பாக தற்போது உச்ச நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்படுகின்றன எனவும் தலைமை நீதிபதி அமர்வு கூறியது. 

உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தொடர்பாக டெல்லி மூத்த பத்திரிகையாளர் நிரஞ்சன் தமது எக்ஸ் பக்கத்தில், “உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழக்கு என்பது 2018 ஆம் ஆண்டு கர்நாடகா அரசு சமர்ப்பித்த feasibility report, 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கி அதன் அடிப்படையில் கர்நாடக அரசு சமர்ப்பித்த மேகதாது திட்ட வரைவு அறிக்கை ஆகியவற்றை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதுதான் அதன் சாராம்சம்.

எனவே உச்ச நீதிமன்றம் வரைவு அறிக்கை எதற்கும் இன்று அனுமதி எதையும் வழங்கவில்லை .

மாறாக கர்நாடகா அரசு சமர்ப்பித்து இருக்கக்கூடிய வரைவு அறிக்கையின் மீது முடிவெடுப்பதற்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர்களைக் கொண்ட காவேரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு ஆகியவற்றின் பரிந்துரையின் அடிப்படையில் தான் செய்ய வேண்டும் என ஒரு முட்டுக்கட்டையை கர்நாடகாவிற்கு போட்டுள்ளது.

காவிரி நதிநீர் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தமிழ்நாடு கர்நாடகா கேரளா புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் ஒருமித்த முடிவுக்கு வராமல் எதையும் காவிரி மேலாண்மை ஆணையத்தாலும் செய்ய முடியாது. இதை தனது இறுதி தீர்ப்பில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஒரு மாதத்திற்கு எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதையும் உச்ச நீதிமன்றமே வகுத்துக் கொடுத்துவிட்டது அதன்படி கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பு என்றும் இன்றைய தினம் காட்டமாகவே உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

  • காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்க கர்நாடகா அரசின் வரைவு அறிக்கையின் மீது மத்திய அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்பது தமிழ்நாடு அரசின் வாதம்; உத்தரவு பிறப்பிக்க மத்திய அரசுக்கு அனுமதி கொடுங்கள் என்பது கர்நாடகா அரசின் வாதம்.
  • தற்பொழுது உச்ச நீதிமன்றம் சொல்லி இருப்பது காவிரி விவகாரத்தில் நாங்கள் ஏற்கனவே அனைத்து உத்தரவுகளையும் தெளிவாக கொடுத்து விட்டோம். அதன்படி நிபுணர்களைக் கொண்ட காவிரி நடுவர் மன்றம், காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு ஆகியவை மட்டும்தான் இதில் முடிவெடுக்க வேண்டியது. அதன்படி ஆணையம் மற்றும் குழு ஆகியவை வழங்கக்கூடிய பரிந்துரைகளின் படி தான் மத்திய அரசின் கீழ் இயங்கும் மத்திய நதிநீர் ஆணையம், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசின் வரைவு அறிக்கையின் மீது முடிவெடுக்க வேண்டுமே தவிர தன்னிச்சையாக எடுக்கக் கூடாது.
  • கர்நாடகாவின் வரைவு அறிக்கை மீது இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கும் பட்சத்தில் அனுமானத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்திருப்பது pre mature. இந்த வார்த்தை தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பயன்படுத்தினார்கள். அப்போது தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் அனைத்தையும் மிகைப்படுத்தி சொல்கிறார்கள் என கர்நாடக அரசு கூட சொல்லி இருந்தது.
  • உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவால் காவிரியின் குறுக்கே கர்நாடகா மேகதாது அணை அமைத்து விடும் என்பது போல சிலர் பேசுவதை பார்க்க முடிகின்றது. இன்னும் சொல்லப்போனால் இது கர்நாடகா அரசுக்கு பெரும் பின்னடைவு. காரணம் மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு பரிந்துரையின் படி தான் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டது. காவிரி விவகாரத்தில் எந்த ஒரு முடிவாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட அனைத்து அரசுகளும் ஒருமித்த கருத்துக்கு வந்தால் மட்டும் தான் அதை காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் மிக முக்கிய சாராம்சம்.
  • காவிரி விவகாரத்தில் எதுவாக இருந்தாலும் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் இன்று பதிவு செய்துள்ளது.
  • உச்ச நீதிமன்ற உத்தரவின் படி கர்நாடகா காவிரியில் இருந்து தண்ணீர் தரவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பு எனவும் உச்ச நீதிமன்றம் இன்று தெளிவுபடுத்தி இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share