ADVERTISEMENT

விமர்சனம் : எப்படி இருக்கு ‘நம்பி கட்ன கம்பி’?

Published On:

| By Kavi

ராஜ திருமகன்

கோகினூர் வைரம் இந்தியாவில் இருந்து பிரிட்டிஷ் மகாராணிக்கு போனது அல்லவா?

ADVERTISEMENT

அப்படிப் போனது ஒரு வைரம் அல்ல இரண்டு வைரம்…. ஒரு வைரத்தை மகாராணிக்கு கொடுத்த பிரிட்டிஷ் அதிகாரி அடுத்த வைரத்தை தானே வைத்துக் கொள்கிறார். அது ரகசியமாகவே இருந்து , பின்னாளில் இந்திய அரசியல்வாதியின் பினாமியாக லண்டனில் உள்ள ஒரு நபர் கைக்கு வருகிறது… என்பது முதல் கம்பி.

அதை இந்தியாவுக்கு கடத்தி வரும் வழியில் அதைக் கைப்பற்ற ஒரு போலீஸ் அதிகாரி திட்டமிடுகிறார் . ஆனால் அதற்கு முன்பே அதை ஒரு கஸ்டம்ஸ் அதிகாரி வைத்துக் கொள்கிறார் . அவரிடம் இருந்து அதை திருட போலீஸ் அதிகாரி நினைக்கிறார் .

ADVERTISEMENT

அதற்கு ஒரு எமகாதகன் வேண்டும் (?) என்பதால் வியாபாரம் , பக்தி, பேச்சுத் திறமை இவற்றின் மூலம் பலரை ஏமாற்றி காசு சம்பாதிக்கும் ஒரு எமகாதகனை (நட்டி நடராஜ்) நியமிக்கிறார்கள் இது அடுத்த கம்பி

கஸ்டம்ஸ் அதிகாரி வீட்டில் இருந்து வைரத்தையும் பணத்தையும் எடுக்கும் அவன் , வைரத்தை ஓரிடத்தில் புதைத்து விட்டு போலீசிடம் பணத்தை மட்டும் கொடுத்து விட்டு வைரம் இல்லை என்கிறான் . எனினும் அவனை நம்பாத போலீஸ் அடி உதை என்று பின்னி எடுக்கிறது .

ADVERTISEMENT

அதை எல்லாம் தாங்கி சில மாதங்கள் கழித்து விடுதலை ஆகி, வைரத்தைப் புதைத்த இடத்தில் போய்ப் பார்த்தால், அங்கே ஒரு பெரிய சாமியார் ஆசிரமம் இருக்கிறது . அது எம்எல்ஏ (முத்துராமன் ) கண்ட்ரோலில் இருக்கிறது .

எம்எல்ஏ மகளை (ஷாலினி) காதலிக்கும் ஒருவன் (முகேஷ் ரவி), அதற்காக எம்எல்ஏ-விடம் உதவியாளராக இருக்கிறான். ஆனால் எம்எல்ஏ-விடம் இருந்து எமகாதகன் பணத்தை திருட , உதவியாளரை விரட்டி அடிக்கிறார் எம்எல்ஏ.

இப்படி ஒரு குறுக்குக் கம்பி .

அந்த இளைஞனையும் தன்னிடம் ஏமாந்த மாதிரியே மக்களை ஏமாற்ற முயன்ற ஒரு நபரையும் ( சிங்கம் புலி ) துணையாக வைத்துக் கொள்ளும் எமகாதகன், தான் இமயமலையில் இருந்து வந்த சாமியார் என்று சொல்லி, அந்த ஆசிரமத்தை கையில் எடுக்கிறார். எம்.எல்.ஏவும் நம்புகிறார். . தனது பெரும் பணத்தை சாமியார் வசம் கொடுக்கிறார் . வாய்ப்புத் தேடி வந்த ஒரு சீரியல் நடிகையை சாமியார் மயக்குகிறார் . சாமியாரை அம்பலப்படுத்த பணத்துக்காக பிரபலங்களின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்தும் ஒரு ய டியூபர் ( டி எஸ் ஆர்) திட்டமிடுகிறார் . இப்படி ஒரு கட்டுக் கம்பி.

தான் வைரத்தைப் புதைத்த இடத்தில் தான் இப்போது ஆசிரமத்தின் கருவறைச் சிலை இருப்பதை அறிந்த சாமியார், ஒரு நள்ளிரவில் அந்தக் கருவறையை உடைத்து தோண்டிப் பார்க்க, அங்கே தான் புதைத்து வைத்த வைரம் இல்லை. இப்படியும் ஒரு சப்போர்ட் கம்பி.

மேற்சொன்ன எல்லா கம்பிகளையும் சேர்த்து வைத்து கட்டும்போது என்ன நடந்தது என்பதே இந்த நம்பி கட்ன கம்பி.

எம்எல் சீட்டிங்….. ஏமாற்று சாமியார் என்று யார் வந்தாலும் மக்கள் நம்புவது… பேச்சுத்திறமை உள்ள ஓர் அயோக்கியன் எந்த சூழலிலும் தான் எப்படி மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கிறான், அரசியல்வாதி சாமியார் உறவு , சாமியாரின் லீலைகள் என்று படத்தின் அடிப்படை விஷயங்கள் சுவாரசியமானவையே

சதுரங்க வேட்டையை ஞாபகப் படுத்தும் இந்தப் படம் ( ஹீரோயிக் வில்லன் அதே நட்டி நடராஜ் என்பதால். அதனால்தான் அவரை ஹீரோவாகவே போட்டு இருக்கிறார்கள்)

எனவே திரைக்கதையில் சதுரங்க வேட்டையை மிஞ்சி இதன் திரைக்கதை இருக்க வேண்டும். அது முடியாவிட்டாலும் ஓரளவாவது சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். ஆனால் சதுரங்க வேட்டை படத்தின் தெளிவற்ற பைரசி காப்பி போல இருக்கிறது படம்.

அந்த சதுரங்க வேட்டையில் மிக சாதாரணமாக வசனம் பேசிய நட்டி நட்ராஜ் இந்தப் படத்தில் அட்டகாசமாக நடித்து இருக்கிறார் .

படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது , “22 ஆண்டுகளாக நான் உருவாக்கிய கதை இது” என்றார். சதுரங்க வேட்டை படம் வெளி வந்தே பதினோரு ஆண்டுகள் ஆகிறது . அதற்கு பதினோரு வருடம் முன்பிருந்தே தயாரிப்பாளர் ஆசைப்பட்ட படம் இது எனில் அது ஒன்றும் தப்பு இல்லை.

ஆனால் பதினோரு வருடம் முன்பு சதுரங்க வேட்டை என்ற படம் தான் வினோத் என்ற அஜீத், விஜய் இயக்குனரையும் நட்டி நடராஜை ஹீரோவாகவும உருவாக்கிய படம் என்னும்போது , அடுத்த பதினோரு ஆண்டுகள் கழித்து அதே நட்டியை ஹீரோவாகப் போட்டு எடுக்கும்போது திரைக்கதையை எப்படி செதுக்கி இருக்க வேண்டும்.

முருகானந்தம் திரைக்கதையில் நேர்த்தி, அப்டேட்டிங் இல்லை. அவரின் வசனங்கள் சில இடங்களில் மட்டுமே வாய் விட்டுச் சிரிக்க வைக்கின்றன. ஆனால் அவர் காமெடி என்று ஒரு கேரக்டரில் நடித்து இருக்கிறார் . பலன் இல்லை.

MRM ஜெய் சுரேஷின் ஒளிப்பதிவு , சதீஷின் இசை இவை பலன் தரவில்லை. எடிட்டர் பாசில் இன்னும் கொஞ்சம் விடாப்பிடியாக இருந்திருக்கலாம் . கலை இயக்குனர் சிவகுமார் பாராட்டுப் பெறுகிறார் .

படத்தின் இரண்டாவது கதாநாயகனான முகேஷ் ரவி ஆரம்பத்தில் அழகிகளோடு சிக்ஸ் பேக்கில், குளியல் அறையில் குளித்துக் கொண்டு, எக்சர்சைஸ் செய்து கொண்டு ஒரு பாட்டுப் பாடுகிறார்.

ஆனால் அந்தக் கேரக்டருக்கு அந்தப் பாட்டு தேவைதானா ? அப்புறம் அது கனவு என்று சொல்வது எல்லாம் மிகப் பழைய உத்தி அல்லவா?

மேலும் அந்த கேரக்டருக்கு சிக்ஸ் பேக் எல்லாம் பொருத்தமாக இல்லை. ஏனெனில் கிளைமாக்ஸ் ஃபைட்டிலும், நட்டிதான் ஸ்கோர் செய்கிறார்

ஒரு படம் என்றால் அதில் குற்றவாளி வில்லனோ அல்லது ஹீரோவோ ஒரு நிலையில் திருந்தினான் அல்லது தண்டிக்கப்பட்டான் அல்லது செத்துப் போனான் என்று சொல்வது ஒரு படைப்பின் கடமை அல்லவா?

இப்போதெல்லாம் சினிமாவில்தான் நியாயம் ஜெயிக்கிறது . அங்காவது நியாய அநியாயத்தை வாழ வைக்கலாமே .

இந்தப் படம் பார்த்து வரும் ரசிகர்களுக்கு ‘யாரையாவது ஏமாத்தியாவது பணக்காரன் ஆகணும்’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தலாமா?

இப்படியாக கம்பிகள் நம்பும்படி இருந்தாலும் ‘கட்ன’ விதத்தில் கவனம் சேர்த்திருக்கலாம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share