INDW vs NZW : கட்டாயம் வென்றாக வேண்டிய நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா – பிரதிகா ராவல் இருவரும் அபார சதம் அடித்து சாதனை படைத்துள்ளனர்.
ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் இலங்கை மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி. ஆனால் அதன்பின்னர் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் அடுத்தடுத்து தோல்வி கண்டது.
இந்த நிலையில் அரையிறுதிக்கு முன்னேற கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில், மும்பை பாட்டீல் மைதானத்தில் நியூசிலாந்து மகளிர் அணியை எதிர்கொண்டுள்ளது இந்திய மகளிர் அணி.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் ஜோடி களமிறங்கியது.
ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தது. ஸ்மிரிதி மந்தனா ஒருநாள் போட்டியில் தனது 14வது சதத்தை (109) பதிவு செய்து ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து ஜெமிமா களமிறங்கிய நிலையில், நிதானமாக ஆடி வந்த பிரதிகாவும் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.
இதன்மூலம் பல்வேறு சாதனைகளை மந்தனா – பிரதிகா ஜோடி படைத்துள்ளது.
உலகக் கோப்பையில் இந்தியாவின் அதிகபட்ச தொடக்கக் கூட்டணி:
- இந்தப் போட்டியில் மந்தனா – ராவல் ஜோடி 212 ரன்கள் குவித்து, ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவிற்கான அதிகபட்ச தொடக்கக் கூட்டணி என்ற புதிய சாதனையைப் படைத்தது.
200+ ரன் பார்ட்னர்ஷிப்:
- ஒருநாள் போட்டியில் இந்த ஜோடி 200+ பார்ட்னர்ஷிப் அமைப்பது இது இரண்டாவது முறை.
ஒரே உலகக் கோப்பையில் இரண்டாவது 150+ ரன் கூட்டணி:
- ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 155 ரன்கள் சேர்த்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் 212 ரன்களை குவித்ததன் மூலம் ஒரே உலகக்கோப்பையில் இரண்டாவது முறையாக இந்த ஜோடி 150+ ரன்கள் குவித்துள்ளது.
தொடக்க வீரர்கள் இருவரும் சதம்!
137 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஒரே இன்னிங்ஸில் சதம் அடித்த தொடக்க வீரர்கள் என்ற சாதனை பட்டியலில் ஸ்மிரிதி – பிரதிகா ஜோடி இடம்பெற்றுள்ளது.
முன்னதாக
லின் தாமஸ், எனிட் பேக்வெல் (EN-W) vs INT-XI-W, ஹோவ், 1973
லிண்ட்சே ரீலர், ரூத் பக்கிஸ்டன் (AUS-W) vs NED-W, பெர்த், 1988
ஸ்மிருதி மந்தனா சாதனை!
- சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இது அவரது 14-வது சதமாகும்.
- உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் இது மூன்றாவது சதமாகும்.
- நடப்பு ஆண்டில் மகளிர் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் (32*) அடித்த வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
பிரதிகா ராவல் சாதனை!
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இது அவரது 2வது சதமாகும்.
உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் இது முதல் சதமாகும்.
