“திண்ணையில கிடந்தவனுக்கு வந்த வாழ்க்கை” என்று தன்னை கிண்டல் செய்து பதிவு செய்தவருக்கு நடிகர் சூரி நச் பதில் கொடுத்துள்ளார்.
கடந்த 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில் யூடியூபர்கள், திரை நட்சத்திரங்கள் தாங்கள் தீபாவளி கொண்டாடிய புகைப்படம், வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தனர்.
அதன்படி நடிகர் சூரியும் குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடிய வீடியோவை வெளியிட்டிருந்தார்.
தனது சொகுசு வீட்டின் முன் பட்டாசு வெடித்து, குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடும் வீடியோவை பகிர்ந்த சூரி கேப்ஷனில், ’எங்கள் ராஜாக்கூர் மண்ணின் மகிழ்ச்சியில், குடும்பத்தோடு தீபாவளி’ என்று பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ இன்ஸ்டா, பேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் பரவி வாழ்த்துகளை குவித்தது.
ஆனால் ஒரு ட்விட்டர் பயணர், ‘திண்ணைல கிடந்தவனுக்கு திட்டுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை’ என்று விமர்சித்திருந்தார்.
இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ள சூரி, ‘திண்ணையில் இல்லை நண்பா… பல நாட்களும் இரவுகளும் ரோட்டில் இருந்தவன் நான்… அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
தற்போது சூரியின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
