ADVERTISEMENT

விமர்சனம் : ’ டீசல்’- தரமாக இருக்கிறதா?

Published On:

| By Kavi

ராஜ திருமகன்

பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருட்கள் மக்களுக்கு வந்து சேர்வதற்குள் அதில் நிகழும் லஞ்ச ஊழல்கள், சட்ட விரோதச் செயல்கள் , குற்றங்கள் அதன் பின்னணியில் இருப்பவர்கள் என்று ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கற்பனைகளும் கலந்து சொல்லும் படம்தான் டீசல்.

ADVERTISEMENT

1979 ஆண்டு சென்னை திருவொற்றியூரில் இருந்து எண்ணூர் வரை பிரம்மாண்ட ராட்சதக் குழாய்கள் பதிக்கப்பட்டன . பல கிலோ மீட்டர் நீளம் உள்ள அந்தக் குழாய்கள் மண்ணுக்கு அடியில் பதிக்கப்பட்டாலும் ஒரு கிலோ மீட்டர் தூரம் மட்டும் அது தரைக்கு மேலே இருக்கும் . கப்பலில் இருந்து வரும் குரூட் ஆயில் அங்கிருந்து இந்தக் குழாய் வழியாக அனுப்பப்பட்டு பின்னர் சேகரிக்கப்பட்டு, பெட்ரோல் டீசல் இவை எல்லாம் பிரிக்கப்படும் .

இது நடைமுறைக்கு வந்த காரணத்தால், ராட்சதக் குழாய் இருக்கும் அந்தப் பகுதிகளில் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது . வறுமை சூழ்கிறது .

ADVERTISEMENT

இதனால் கோபம் கொண்ட ஒருவர் (சாய் குமார்), சில மீனவர்கள் உதவியோடு, நிலத்துக்கு மேல் இருக்கும் குழாயில் இருந்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் குரூட் ஆயில் திருடுகிறார் .

ஆயில் திருடும் நபரின் நண்பர் ஒருவர் அவருக்காக உயிரையே விட, அந்த நண்பரின் மகனைச் சொந்த மகனாக வளர்க்கிறார் குரூட் ஆயில் திருடுபவர். வளர்ப்பு அப்பா மேல் மிகுந்த பாசமாக இருக்கும் அந்த மகன்,(ஹரீஷ் கல்யாண்) கெமிக்கல் இன்ஜினியரிங் படித்து விட்டு, ஆயில் கடத்தலில் வளர்ப்பு அப்பாவுக்கு உதவியாக களம் இறங்குகிறான்.

ADVERTISEMENT

கடத்தப்படும் குரூட் ஆயில், பம்பாயில் பெரும் தொழில் அதிபராக இருக்கும் பதான் என்பவருக்கு அனுப்பப்பட , அவர் குரூட் ஆயிலை பிரித்து நாப்தலின் , தார் போன்ற மற்ற பொருட்களை விற்று லாபம் பார்த்துக் கொண்டு, இவர்கள் அனுப்பிய குரூட் ஆயில் அளவுக்கு பெட்ரோல் டீசலை மட்டும் அனுப்பி வைப்பார். .

இந்த பெட்ரோலும் டீசலும் அரசாங்க பெட்ரோல் மற்றும் எரிபொருள் துறையால் கொடுக்கப்படும் பெட்ரோல் டீசலுக்கு அப்பாற்பட்டு, நேரடியாக பெட்ரோல் பங்குக்கு நாயகனாலும் வளர்ப்பு அப்பாவாலும் அனுப்பப்படும். அதில் அரசுக்கு பணம் போகாது என்பதால் , அதில் கிடைக்கும் பணம், பெட்ரோல் பங்க் முதலாளிகள், கடத்தல் நாயகர்கள், மும்பை பதான், ஆகியோருக்குப் போகும் .

வளர்ப்பு அப்பாவுக்கும் கெமிக்கல் என்ஜினீயரிங் படித்த நாயகனுக்கும் வரும் லாபத்தில் பெரும் பகுதியானது, இந்த குரூட் ஆயில் குழாய் திட்டத்தால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் இழந்த மீனவ மக்களுக்குப் போய்ச் சேரும் .

இது தவிர விமானத்துக்கு பயன்படும் ஒயிட் பெட்ரோலை, முப்பது டிகிரி செல்சியஸ் அளவுக்கு உறைய வைத்து அதை ஐஸ்கட்டி போல மாற்றி, மீன்களை பதப்படுத்தும் ஐஸ் கட்டி என்று காட்டி, அதையும் கடத்துகிறான் கெமிக்கல் என்ஜினீயரிங் படித்த நாயகன்.

இந்த குரூட் ஆயில் கடத்தலில் தானும் ஈடுபட்டு பெரும் பணம் சம்பாதிக்க ஆசைப்படும் ஒருவனும் (விவேக் பிரசன்னா) . அடாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் (வினய் ராய்) கூட்டணி அமைத்துக் கொண்டு டீசல் குட்டையைக் குழப்புகிறார்கள்.

அதோடு கேசரி பொடியைக் கலந்து கலப்பட பெட்ரோல் தயாரித்து நாயகன் மற்றும் வளர்ப்பு அப்பாவின் பெட்ரோல் டீசல் போகும் லாரிகளிலேயே ரகசியமாக அனுப்புகிறார்கள். வாகனங்களின் என்ஜின் கெட்டுப் போய் பெட்ரோல் பங்குகளில் பிரச்சனை வருகிறது .
நாயகன் மற்றும் வளர்ப்பு அப்பாவிடம் பங்க் உரிமையாளர்கள் கோபப்பட, நாயகன் கலப்பட பெட்ரோல் நபரை பிடிக்க, அவனுக்கு ஆதரவாக இன்ஸ்பெக்டர் வர , அது நாயகன் – இன்ஸ்பெக்டர் பகையாகிறது. ,

ஒரு நிலையில் மும்பை பதான் சென்னையில் ஒரு மாபெரும் தனியார் துறைமுகத்தை உருவாக்கி, அங்கே குரூட் ஆயில் தட்டுப்பாட்டை உருவாக்கி , டீசல் பெட்ரோலுக்கு மக்களை அலைய விட்டு, அரசைப் பணிய வைத்து , தனது சூரிய மின்சாரம் திட்டத்தை எல்லா மக்கள் தலையிலும் திணித்து, பல கோடி கோடிகள் சம்பாதிக்க திட்டமிடுகிறார் . கலப்பட பெட்ரோல் நபருக்கு ஆதரவாகவும் மாறுகிறார் பதான் . அவருக்கு ஆதரவாக குரூட் ஆயில் குழாயில் இருந்து இரண்டாயிரம் கோடி லிட்டர் குரூட் ஆயிலைக் கடத்துகிறான் அந்த கலப்பட பெட்ரோல் நபர் . அப்போதுதான் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு உருவாகும் . பதானின் திட்டம் பலிக்கும்.

பதானின் திட்டம் நிறைவேறினால் சென்னையில் மீனவர்கள் மீன் பிடிக்கவே முடியாத நிலை ஏற்படும் . நடந்தது என்ன என்பதே டீசல்.

இதுவரை சொல்லப்படாத ஆச்சர்யங்கள் அதிர்ச்சிகள் நிறைந்த மக்களுக்கு விழிப்புணர்ச்சியை கொடுக்கும் கதை .

இதற்காக பல வருடங்கள் ஆராய்ந்து ஆதாரங்களைத் திரட்டி எழுதிய இயக்குனர் சண்முகம் முத்துசாமிக்கு வாழ்த்துகள் .

இனம் மொழி , வர்க்கம் , அப்பாவி ஏழை ஜனங்கள் , வடக்கு தெற்கு வன்மை அரசியல்.. இவை குறித்த சண்முகம் முத்துசாமியின் புரிதலும் தெளிவும் நிலைப்பாடும் கொண்டாடத்தக்கது .. ஃபிலிம் மேக்கிங்கும் கவர்கிறது. .

நாயகன் ஹரீஷ் கல்யாண் முழு ஆக்ஷன் ஹீரோவாக முழமையாக மாறி இருக்கும் படம் இது .

படத்தின் சிறப்பான கதைக்கு எந்த வகையிலும் உதவாத காதலி கேரக்டர் அதுல்யா ரவிக்கு . அவரது குளோசப் ஷாட்களில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்

காதல் காட்சிகளை எம் எஸ் பிரபுவும் மற்ற ஆக்ஷன் காட்சிகளை ரிச்சர்ட் எம் நாதனும் ஒளிப்பதிவு செய்தார்கள் என்று இயக்குனர் பேட்டி கொடுத்ததன் அடிப்படையில் பார்த்தால், ரிச்சர்ட் நாதன் ஆக்ஷன் காட்சிகளுக்கு அட்டகாசமான ஒளிப்பதிவு செய்திருக்கிறார் .

படத்தின் டோன், கலர், ஃபிரேமிங், அதன் மூலம் கடலையும் கடல் புறத்தையும் உணர் வைப்பது , இரவின் மர்மத்தைக் காட்டுவது என்று அசத்தி இருக்கிறார்கள் ரிச்சர்ட் எம் நாதனும் எம் எஸ் பிரபுவும்

தமிழ் சினிமாவின் சிறந்த நூறு மெலடி பாடல்களை விருப்பு வெறுப்பின்றி தொகுத்தால் அதில் ஒன்றாக வரும்” கண்கள் ஏதோ பேச..” (படம் சித்தா) பாடலைக் கொடுத்த திபு நினன் தாமஸ் இசை, இந்தப் படத்திலும் அபாரம் .

படத்தில் வரும் மெல்லிசைப் பாடல்கள் குத்துப் பாடல்கள் அனைத்தும் சிறப்பு. பின்னணி இசையிலும் ஈர்க்கிறார் . குறிப்பாக கடலில் நாயகனை சந்தித்து விட்டு நாயகி பிரிந்து வரும் காட்சியில் அந்த பின்னணி இசை பின்னாடியே போய் விடுகிறது மனசு .

தளபதி படத்தில் வந்த ராக்கம்மா கையத்தட்டு பாட்டு ஒரு நிலையில் சட்டென்று மெலடியாகி ”குனித்த புருவமும் …”என்று ஷோபனா வருவாரே அதே பாணியில்” தில்லு பாரு ராஜா….” பாட்டில் அதுல்யாவை அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர்

கலை, இயக்கம் சண்டைக் காட்சிகளும் அருமை .

நடிப்பில் சாய் குமார் அசத்தி இருக்கிறார் . வினய் ராய் கேரக்டரின் வன்மை குணத்தை சிறப்பாக சுமந்து ரசிகனுக்கு கடத்துகிறார் . கலப்பட பெட்ரோல் ஆளுக்கு தன் மனைவி கையால் சோறு போட்டு அவள் முன்னாலேயே அவனை அடிக்கும் காட்சி அபாரம் .

தங்கதுரையும் விஜய் டிவி தீனாவும் ரசிகர்களுக்கு சிரிப்பு வரும்படி காமெடி செய்திருக்கலாம். .

இதுபோன்ற சமூக அக்கறை உள்ள கதைகளைக் கொண்ட படங்களில் முதலில் எதைப் பற்றிய படம் என்பதை லேசாக கோடு போலக் காட்டி விட்டு , ஒரு வணிக ரீதியான படத்துக்கு தேவையான காதல் செண்டிமெண்ட் பாசம் எல்லாவற்றையும் தேவைப்படும் அளவுக்கு மட்டும் காட்டி விட்டு, மக்களை ஈர்க்கிற, மக்களுக்கு முக்கியமாக சொல்ல வேண்டிய , கதைக்கு வந்து விட வேண்டும் . அப்படி வந்து விட்டால், அப்புறம் திசை மாறாமல் பரபரவென்றோ அழுத்தமாகவோ சரியான பாதையில் திரைக்கதை பயணிக்க வேண்டும் . இங்கு அப்படி நடக்கவில்லை.

இந்தப் படத்துக்கு பலமாக இருக்கும் விஷயங்கள் சில நிமிடங்கள் மட்டும் காட்டப்பட்டு விடப்பட , வழக்கமான காட்சிகள் படத்தை நிரப்புகின்றன. சில முக்கிய விஷயங்கள் பின்னணி குரலில் கடப்பதும் பலவீனம்.

இரண்டாயிரம் கோடி லிட்டர் குரூட் ஆயிலை படத்தில் இரண்டு குளோசப்களில் மட்டும் வரும் காளி வெங்கட் கேரக்டர் ஓர் இரவுக்குள், போட்களில் ஏற்றி கடலுக்குள், அதுவும் யாருக்குமே தெரியாமல் ரகசியமாக கடத்தி விடுகிறது என்பது பொருத்தமான காட்சியாக இல்லை.

இரண்டாம் பகுதியில் எமோஷனலாக வர வேண்டிய காட்சிகள் எல்லாம் தகவல்களாகக் கடப்பதும் படத்துக்கு பலமாக அமையவில்லை .

தவிர படத்தில் சொல்லப்படும் பிரச்னை ‘ 2014 லேயே பாதிக்கு மேல் முடிந்தது . இப்போ நிலைமை அவ்வளவு மோசம் இல்லை’ என்பதும், இந்தப் படத்துக்கு ஒரு பலவீனமே . அப்போது நடந்த கொள்ளைகளின் விளைவாக இன்று என்ன நடக்கிறது என்று சொல்வது முக்கியம் அல்லவா ?

ஒரு படத்துக்கு அருமையான கதை மட்டுமல்ல… பொருத்தமான திரைக்கதையும் முக்கியம் . இல்லை என்றால் உரிய பலன் இருக்காது என்பதை லிட்டர் கணக்கில் சொல்லும் படம் டீசல்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share