ராஜ திருமகன்
தூத்துக்குடி பகுதியில் 1990 களில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்கிற கிராமமான வனத்தியில் பிறந்து கபடி மீது தீராக் காதல் கொண்டு , ஆனால் சுயசாதி கபடி வீரனாலேயே புறக்கணிக்கப்படும் இளைஞன் கிட்டான் ( துருவ்).
தாழ்த்தப்பட்ட கபடி வீரன் ஒருவன் சிறப்பாக ஆடியதாலேயே கொல்லப்பட்ட விஷயம் தெரிந்த அப்பா ( பசுபதி), கிட்டான் கபடி ஆடக் கூடாது என்கிறார்.
ஆதிக்க சாதியைச் சேர்ந்த உடற்பயிற்சி ஆசிரியர் (அருவி மதன்) கிட்டானுக்கு உதவ , ஆதிக்க சாதி நபர் என்றாலும் கந்தசாமியும் (லால்) கபடி மீது கொண்ட காதலால் அவனுக்கு உதவுகிறார் .
ஆனால் அவருக்கும் தாழ்த்தப்பட்ட சாதித்தலைவர் பாண்டிய ராஜுக்கும் ( இயக்குனர் அமீர்) இருந்த சாதிப் பகையில் பாண்டியராஜா கொல்லப்பட , கிட்டானை இப்போது யார் பகைப்பார்கள், யார் உதவுவார்கள் என்பதே தெரியாத நிலை .

பலமுறை கோபத்தில் கொந்தளித்ததும் உயிருக்கு பயந்து நடுங்கியும் ஒரு வழியாக இந்தியா பாகிஸ்தான் இடையிலான கபடி அணிக்கு தேர்வாகிப் போனால் அங்கும் அவனுக்கு ஆட வாய்ப்பு மறுக்கப்படுகிறது .
ஏன் ? ஜெயிக்காமல் ஊருக்குள் வந்தால் யார் கொல்வார்கள் என்றே தெரியாத நிலையில் கிட்டானுக்கு நடந்தது என்ன? என்பதே படம்
தலித் இளைஞனும் சிறந்த கபடி வீரருமான மணத்தி கணேசனின் வாழ்வில நடந்த சில உண்மைச் சம்பவங்களோடு கற்பனைகளையும் சேர்த்து இந்தப் படத்தை எழுதி இருப்பதாக படத்தின் துவக்கத்தில் சொல்கிறார் மாரி செல்வராஜ் ,
சமரசம் இல்லாத கடின உழைப்பு, மிக நீண்ட லாங் ஷாட்கள் மூலம் கதை நடக்கும் நிலவியல் , மண் மனம் , கதை நடக்கும் சூழல் இவற்றை சிறப்பாக உருவாக்குவதன் மூலம் சாதாரண காட்சிகளையும் தரக் கூட்டல் செய்து வழங்குவதில் மாறி செல்வராஜ் வல்லவர் . இந்தப் படத்தில் இன்னும் உயரம் தொட்டிருக்கிறார் .
சேறு, சகதி, ரத்தம் , வியர்வை , கண்ணீர் , மரம் , செடி கொடி வயல் வரப்பு, தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதி தெய்வங்கள் இவற்றை பயன்படுத்துவதிலும் வழக்கம் போலவே ஜொலிக்கிறார் . திரைக்கதை கொஞ்சம் தொய்வடையும் நேரங்களில் அதை அழகியல் , ஃபிரேமிங், ரசனையான ஷாட்கள் மூலம் தூக்கி நிறுத்தி விடுகிறார்

” யாருன்னே தெரியாத ஒருத்தன் வந்து கட்டிப் புடிச்சு நீ நம்ம ஆளுங்கறான் . யாருன்னே தெரியாத ஒருத்தன் முறைக்கிறான் எவன் உண்மை எவன் பொய்ன்னு தெரியல என்று துருவ் விக்ரம் புலம்பும் இடம் அபாரம் . தனது படங்களில் பெண்களை கம்பீரமாகக் காட்டுவதில் ரஞ்சித் , மாரி செல்வராஜ் இருவரும் மிக சிறப்பானவர்கள்
படத்தின் இரண்டு கதாநாயகிகளின் ( அனுபமா , ரெஜிஷா) காதலன்களும் பெண்களை விட வயதில் சிறியவர்கள் . பெண்கள்தான் வயது குறைவாக இருக்க வேண்டுமா என்ற பெண்ணியக் குரலும் பாராட்டுக்குரியதே
பிற்படுத்தப்பட்ட ஆட்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவியதால் தன் சமூக ஆட்களிடம் அடிவாங்கிய பிற்படுத்தப்பட்ட ஆட்களும் உண்டு .சொந்த லாபத்துக்காக சாதி வெறி பிடித்த பிற்படுத்தப்பட்ட சாதி ஆட்களிடம் பணத்துக்காக தன் சமூகப் போராளிகளை காட்டிக் கொடுக்கும் தாழ்த்தப்பட்ட ஆட்களும் உண்டு என்று நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறார் மாரி செல்வராஜ்.
நிஜ கிட்டானான மணத்தி கணேசனுக்கு சாதி வேறுபாட்டிற்கும் அப்பாற்பட்டு வெங்கடேசப் பண்ணையாரும் சிவந்தி ஆதித்தனும் செய்த உதவிகளையும் பதிவு செய்து இருக்கிறார்.
வாழை மரத்தைத் தூக்கிக் கொண்டு ஓடுவது, சினிமா சண்டையா இல்லை நிஜ சண்டையா என்று வியக்கும் அளவுக்கு சண்டைக்காட்சிகளில் நடித்து இருப்பது என்று … இவரை வைத்து என்ன படம் என்றாலும் செய்யலாம் என்ற நம்பிக்கையை விதைக்கிறார் துருவ்
இயல்பில் ஜொலிக்கும் நடிப்பை படம் முழுக்க வழங்குகிறார் பசுபதி . எப்பேர்ப்பட்ட கலைஞன்! .
கம்பீரமான கேரக்டரில் பட்டாசு வசனங்களை பேசி பலம் சேர்க்கிறார் அமீர் .
ரெஜிஷா அப்படியே வனத்தி கிராம தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணாக கிட்டானின் அக்காவாக கூடு விட்டு கூடு பாய்ந்திருக்கிறார் .
சற்றே மலையாள வாசனைப் பேச்சு, மலையாள நடை உடை பாவனை இருந்தாலும் கிட்டானின் காதலியாக வரும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பும் சிறப்பு. பல படங்களில் தமிழை மலையாளம் போல பேசி அதையும் விக்கல் வந்த மாதிரி பேசும் வழக்கமுள்ள லால் இப்படத்தில் சிறப்பாக பேசி இருப்பது ஆச்சர்யம்
இயக்குனரின் கற்பனையை நிஜத்தில் கொண்டு வருவதில் மாபெரும் பங்களிப்பை தந்திருக்கிறது எழில் அரசுவின் ஒளிப்பதிவு
நிவாஸ் பிரசன்னாவின் இசையில் ஆழமும் அழுத்தமும் அதிகம்
பைசன் என்பது காட்டெருமை . அதாவது எருமை . ஆனால் காள மாடன் என்பது வேறு . பைசன் எப்படி காளமாடனாகவும் இருக்க முடியும் என்ற கேள்வி ஆரம்பத்தில் வந்தது நிஜம் . ஆனால் மண்ணின் மைந்தர்களுக்கு அவன் காளமாடன் . காஸ்மாபாலிட்டன் சமூகத்தின் பார்வையில் அவன் பைசன் என்று உணரவைக்கும் விதம் அருமை .
இரண்டு சாதித் தரப்பாலும் ஆபத்தில் இருக்கும் கிட்டான் உயிரோடு பிழைப்பானா? அவனுக்கு எதுவும் ஆகி விடுமோ என்ற பதட்டம் படத்தில் வருவது அவசியம்
ஆனால் எடுத்த எடுப்பிலேயே கிட்டான் இந்திய அணியின் சார்பாக ஜப்பான் வரை போய்விட்டான் போய்விட்டான் என்று சொல்லி விடுவதால அந்த பதட்டம் மிஸ் ஆனாலும் .
மீண்டும் ஜெயித்து இருக்கிறார் மாரி செல்வராஜ் . தீபாவளி பந்தயத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கிறான் பைசன் காளமாடன்
