ADVERTISEMENT

இசையமைப்பாளரும், தேவாவின் சகோதரருமான சபேஷ் காலமானார்!

Published On:

| By christopher

deva brother music director sabesh died today

இசையமைப்பாளர் சபேஷ் உடல்நலக் குறைவால் இன்று (அக்டோபர் 23) காலமானார் என்ற செய்தி திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 68.

தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளரான தேனிசை தென்றல் தேவாவின் இளைய சகோதரர் சபேஷ் (எம்.சி. சபேசன்).

ADVERTISEMENT

இசையமைப்பாளரான இவர் தனது சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ் – முரளி என்ற பெயரில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து இசையமைத்த சமுத்திரம், தவமாய் தவமிருந்து, மாயாண்டி குடும்பத்தார், பொக்கிஷம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி மற்றும் கோரிப்பாளையம் ஆகியவை குறிப்பிடத்தக்க படங்களாகும்.

சபேஷ் – முரளி

சபேஷ் இசையமைப்பாளர் தேவாவின் இசைக் குழுவில் உதவி இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். பின்னணி பாடகராவும் பணியாற்றிய இவர், தேவா இசையமைத்த ‘காத்தடிக்குது காத்தடிக்குது’, ‘கந்தன் இருக்கும் இடம் கந்தகோட்டம்’, ‘கொத்தால் சவடி லேடி…’ போன்ற பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.

ADVERTISEMENT

இவர் திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.

இவரது மகன் கார்த்திக் சபேஷ் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக உள்ளார். மேலும், இவரது சகோதரியின் மகன்தான் நடிகர் ஜெய் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று மதியம் 12 மணியளவில் பிரிந்தது.

சபேஷின் மறைவுக்கு திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை (அக்டோபர் 24) மாலை 3 மணிக்கு பிருந்தாவனம் நகர் இடுகாட்டில் வைத்து உடல் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share