இளைஞர்கள் குடிப்பழக்கம், கஞ்சா போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகி விடாதீர்கள். அப்படி செய்தால் உங்கள் வாழ்க்கை மட்டுமல்ல, உங்கள் தாய், தந்தை, குடும்பத்தினர் அனைவரின் வாழ்க்கையையும் நரகமாக்கிவிடும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இன்று (ஏப்ரல் 8) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ரஜினி – கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “ஜெயிலர் 2 படத்திற்கான ஷூட்டிங் இன்னும் இரண்டு மூன்று நாட்களே உள்ளது. அந்தப் படத்தின் பணிகள் விரைவில் முடிவடையும். ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும்” என்று தெரிவித்தார். மேலும், அந்தப் படத்திற்கான கதை தேர்வாகிவிட்டதாகவும் அவர் கூறினார்.
சக நடிகராக விஜய்யின் ஜனநாயகன் படம் வெளிவராமல் இருப்பது குறித்த கேள்விக்கு, “Sorry, நான் இதுபற்றி கருத்து சொல்ல விருப்பமில்லை” என்று பதிலளித்தார்.
இளைஞர்கள் நடிகர்கள் மீது ஆர்வத்தில் ஓடிச் சென்று கீழே விழுந்து அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் குறித்து கேட்டபோது, “இளைஞர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அடிபட்டால் அவர்களுக்குத்தான் காயம் ஏற்படும். அதனால் அவர்களே கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.
தமிழக இளைஞர்களுக்கான உங்கள் அறிவுரை என்ன என்ற கேள்விக்கு, “படிக்கும் காலத்தில் படிப்பில் மட்டுமே முழு கவனமும் இருக்க வேண்டும். படிக்கும் காலத்தை விட்டால், வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அதை மனதில் வைத்து, படிப்பு மட்டும் அவர்களது சிந்தனையில் இருக்க வேண்டும்.
முதலில் உடல் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். குடிப்பழக்கம், கஞ்சா போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகி விடாதீர்கள். அப்படி செய்தால் உங்கள் வாழ்க்கை மட்டுமல்ல, உங்கள் தாய், தந்தை, குடும்பத்தினர் அனைவரின் வாழ்க்கையையும் நரகமாக்கிவிடும்.
அப்படிப்பட்ட தீய பழக்கங்கள் உள்ள நண்பர்கள் கிடைத்தால், அவர்களை அருகில் கூட அனுமதிக்காதீர்கள். தூரமாகவே இருங்கள்.” என தெரிவித்தார்.
