எடப்பாடி பழனிசாமிக்கு கொலை, கொள்ளை இதுவெல்லாம் கைவந்த கலை. ஏற்கனவே அவர் 1979-இல் தனது பங்காளிகள் மூன்று பேரை கொலை செய்த வழக்கில் கொலை குற்றவாளியாக இருந்தார். அன்று அதிமுக ஆட்சியில் இல்லாமல் இருந்திருந்தால் இன்று எடப்பாடி ஆயுள் கைதியாகத்தான் இருந்திருப்பார் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த பிரச்சாரத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, கொரோனா காலத்தையும் திமுக ஆட்சி காலத்தையும் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். திமுக ஆட்சியில் கொரோனா வரவில்லை; வந்திருந்தால் கொரோனாவில் இவரே போயிருப்பார் என்று முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை விழுப்புரத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “1976-இல் நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, 23 வயதில் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறைக் கொடுமைக்கு ஆளானவன் நான். ஓராண்டு காலம் நெஞ்சுரத்தோடு சிறையில் இருந்தவன் நான். பொதுவாழ்க்கையில் எல்லாவற்றையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்று என்னை சிறைக்கு அனுப்பி வைத்தவர் என்னுடைய தலைவர், என்னுடைய தந்தை கலைஞர். கொடுஞ்சிறையின் கொடுமைக்கே பயப்படாதவன் நான். இந்தக் கொரோனாவுக்கா பயப்படப் போகிறேன்?” என்று பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.
இந்நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:“முதல்வர் பிரச்சாரம் செல்லும் இடமெல்லாம் கூடும் கூட்டத்தைக் கண்டு வயிற்று எரிச்சல் காரணமாக விதவிதமாய் எடப்பாடி பழனிசாமி பிதற்றுகிறார். ஒப்பற்ற தலைவரான முதல்வரை எடப்பாடி பழனிசாமி தரக்குறைவாகப் பேசுவது கண்டனத்திற்கு உரியது. எவ்வளவு வாய்க்கொழுப்பு இருந்திருந்தால் ‘கொரோனாவில் முதலமைச்சர் போய்ச் சேர்ந்திருப்பார்’ என்று எடப்பாடி பேசுகிறார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் உயிருக்கு பயந்தவர் அல்ல. எவ்வளவு தடுத்தும் கோவையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படும் வார்டுக்குள் நேரில் சென்று பார்வையிட்டு வந்தவர் முதலமைச்சர். அப்போது அவரது துணைவியாரே கதறி அழுதிருக்கிறார். உதயநிதி ஸ்டாலினிடம் ‘உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுங்கள்’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ‘எங்கள் தந்தை கோவை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளைப் பார்த்துவிட்டு வந்த நேரத்தில் அவருக்கு என்ன ஆகுமோ என்ற அச்சம் எங்கள் எல்லோருக்கும் ஏற்பட்டது. அதுதான் என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி’ என மிகுந்த வேதனையோடு சொன்னார். திமுகவில் இருக்கும் மூத்த தலைவர்கள் அனைவரும் கலங்கினோம்.
அப்படிப்பட்ட தலைவரைப் பற்றி எடப்பாடி இந்த அளவிற்கு கேவலமாகப் பேசுகிறார் என்றால் அது ஒன்றும் புதிதல்ல. அவருக்கு கொலை, கொள்ளை இதுவெல்லாம் கைவந்த கலை. ஏற்கனவே அவர் 1979-இல் தனது பங்காளிகள் மூன்று பேரை கொலை செய்த வழக்கில் கொலை குற்றவாளியாக இருந்தார். அன்று அதிமுக ஆட்சியில் இல்லாமல் இருந்திருந்தால் இன்று எடப்பாடி ஆயுள் கைதியாகத்தான் இருந்திருப்பார். எடப்பாடியின் உயிரைப் போக்குகின்ற கொலைவெறி மனப்பான்மை இன்னும் போகவில்லை என்பதை நேற்றைய தினம் அவருடைய பேச்சின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.”இப்படி அவர் பேசியதன் மூலம் தமிழ்நாட்டு மக்களும் திமுக தொண்டர்களும் கொதித்துப் போய் உள்ளனர் என்று ஆர்.எஸ். பாரதி கூறினார்.
மேலும், “இவரால் சாத்தான்குளத்தில் மூடி மறைக்கப்பட்ட அந்தக் கொலை வழக்கில், திமுக தலைவர் தளபதி தலையிட்டு போராடி சிபிஐ விசாரணைக்குக் கொண்டு வந்த காரணத்தால் அண்மையில் தீர்ப்பு வந்துள்ளது. அத்தனை பேருக்கும் மரண தண்டனை. எடப்பாடி புரிந்து கொள்ள வேண்டும்.
அதேபோல், உங்களை எல்லாம் ஆளாக்கிய தலைவி ஜெயலலிதா வாழ்ந்த கொடநாடு பங்களாவில் பல கொலைகள் செய்யப்பட்டு கோடிக்கணக்கான சொத்துக்கள் பறிபோனது. அப்போது ஆட்சியில் இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. எப்படி சாத்தான்குளம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தூக்குத் தண்டனை கிடைத்ததோ, அதேபோல் கொடநாடு வழக்கிலும் தீர்ப்பு வரும்” என்றும் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.
