Puducherry Assembly Election 2026: புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு.. 11மணி நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Election

புதுச்சேரி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 9) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 37.70% வாக்குகள் பதிவாகியுள்ளன.

புதுச்சேரியில் 30 தொகுதிகளில்மொத்தம் 294 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். சுமார் 9.5 லட்சம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 17.41 % வாக்குகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து காலை 11 மணி நிலவரப்படி 37.70 % வாக்குகள் பதிவாகி உள்ளது.

ADVERTISEMENT

புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி மோட்டார் சைக்கிளில் வந்து, திலாசுபேட்டையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். அமைச்சர் நமச்சிவாயம் தனது மனைவியுடன் சென்று, திருக்கனியூர் அரசு பள்ளியில் வாக்கு செலுத்தினார்.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் நெட்டப்பாக்கம் மடுகரை அரசு நடுநிலைப் பள்ளியிலும், அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் ரயில்நிலையம் எதிரே உள்ள குபேர் திருமண மண்டபத்திலும் வாக்கு செலுத்தினர்.

ADVERTISEMENT

லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ரெட்டியார்பாளையம் இமாகுலேட் பள்ளியிலும் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி வாக்கு செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வழக்கம் போல் அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு வாக்களித்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

புதுச்சேரியில் உள்ள வி.ஓ.சி அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நிலா என்ற பெயர் கொண்ட ரோபோட் வாக்காளர்களுக்கு பூ கொடுத்து வரவேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. நிலா ரோபோ பாரம்பரிய உடையான தாவணியை அணிந்து கையில் பூத்தட்டை ஏந்தியபடி வாக்காளர்களுக்கு பூக்கொடுத்து வரவேற்றது வாக்காளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

புதுச்சேரியில் உள்ள மண்ணாடி பட்டு தொகுதியில் திருக்கானூர் பகுதியில் உள்ள வாக்கு சாவடியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வாக்களித்து சென்ற பின்னர் பாஜக காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் சம்பவம் ஏற்பட்டது. இதனால் சற்று நேரம் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

இந்நிலையில் இன்று தேர்தல் நடைபெற்று வரும் கேளராவில் காலை 11 மணி நிலவரப்படி 32.60% வாக்குகளும், அசாமில் 37.98% வாக்குகளும் பதிவாகி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share