எந்தவொரு பொருளும் விளையும்போது அல்லது உற்பத்தி செய்யப்படும்போது, அதில் இருந்து பெருமளவு பயனைத் துய்ப்பதென்பது அரிதாகத்தான் நிகழும். ஆனால், ஒரு உரிமையாளர் அப்படிப்பட்ட பயன்களை ஒன்றுவிடாமல் அள்ளவே ஆசைப்படுவார்.
அந்த வகையில், ‘பாகுபலி’ என்பது இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘பிராண்ட்’ ஆகிவிட்டது. அப்படத்தின் இரண்டு பாகங்களும் செய்த வசூல் சாதனைகளே தெலுங்கு திரையுலகம் மீது பல்வேறு திசைகளில் இருக்கும் படைப்பாளிகளின் பார்வையை விழச் செய்திருக்கிறது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உட்படப் படத்தில் நடித்த பல கலைஞர்களை உலகம் முழுக்க இருக்கிற சினிமா ரசிகர்கள் அறியச் செய்திருக்கிறது.
இந்த நிலையில், முதல் பாகம் வெளியான பத்தாண்டு நிறைவுக் கொண்டாட்டத்தையொட்டி ‘பாகுபலி – தி எபிக்’ பட அறிவிப்பு வெளியானது. முதல் இரண்டு பாகங்களைச் சேர்த்து, தொகுத்து, அவற்றில் உள்ள முக்கியக் காட்சிகளை மட்டும் ஒன்றிணைத்து மிகப்பெரிய அளவில் வெளியிடும் திட்டம் இதன் பின்னிருந்தது.
தற்போது, அந்த ‘பாகுபலி – தி எபிக்’ படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது. படத்தின் ஒவ்வொரு ப்ரேமும் மெருகேற்றப்பட்டு, ‘ரீ எடிட்’ செய்யப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், இப்படம் ‘3டி’யில் வெளியாகவுள்ளதை முன்னுணர்த்தும் வகையில் முதல் இரண்டு பாகங்களில் இடம்பெற்ற அதே ப்ரேம்கள் இதில் ‘செறிவுடன்’ மாற்றப்பட்டிருப்பது தெரிகிறது.
நிச்சயமாக, அதுவே ‘பாகுபலி – தி எபிக்’கின் யுஎஸ்பி ஆகவும் இருக்கும் என்று தெரிகிறது. ஐமேக்ஸ், டி-பாக்ஸ், எபிக் மற்றும் 4டிஎக்ஸ் முறைகளில் இப்படத்தைக் காண முடியும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இந்தியாவிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் இவ்வசதிகள் இல்லை என்பதால், அக்குறையைத் தீர்க்க ‘3டி’யில் இப்படம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 31ஆம் தேதியன்று இது தியேட்டர்களில் வெளியாகிறது. அதற்குள் இப்படம் ‘3டி’யில் வெளியாகிறதா, இல்லையா என்பது தெளிவாகிவிடும்..!
