தமிழகத்திற்கும் டெல்லிக்குமான தேர்தலா? – திமுக கருத்துக்கு பியூஷ் கோயல் பதில்!

Published On:

| By Pandeeswari Gurusamy

BJP

நாட்டை இவ்வாறு இரண்டாகப் பிரித்துப் பார்க்கும் பார்வை எங்களுக்கு இல்லை. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவே தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்பட்டு வருகிறது என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று (ஏப்ரல் 9) கோவை வந்தார்.

ADVERTISEMENT

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய அரசு வழங்கிய ஏராளமான நிதியை திமுக தலைமையிலான மாநில அரசு முறையாகப் பயன்படுத்தவில்லை. வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராக்கப்படுவார். அது தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரானது” என்றார்.

மேலும், “திமுக தலைவர் ஸ்டாலினும் அவரது குடும்பத்தினரும் தமிழகத்தின் வளர்ச்சியைப் பின்னோக்கி கொண்டு செல்கின்றனர். திமுக ஆட்சியில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. திமுக கடந்த தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தமிழகத்தின் பொருளாதாரத்தை மிக மோசமான நிலைக்கு இந்த அரசு கொண்டு செல்கிறது” என்று விமர்சித்தார்.

ADVERTISEMENT

தமிழக மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு நிதிகளை வழங்கியபோதும், அதை மாநிலத்தின் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்கு பயன்படுத்தாமல், திமுக அரசு முறைகேடுகள் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

“தேசிய ஜனநாயகக் கூட்டணி நல்லாட்சிக்கு உறுதி அளித்துள்ளது. செந்தில் பாலாஜி உட்பட திமுகவின் ஊழல் அமைச்சர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்படும்” என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

ADVERTISEMENT

தமிழகத்திற்கும் டெல்லிக்குமான தேர்தல் என்ற திமுகவினரின் கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நாட்டை இவ்வாறு இரண்டாகப் பிரித்துப் பார்க்கும் பார்வை எங்களுக்கு இல்லை. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவே தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்பட்டு வருகிறது” என்று பதிலளித்தார்.

மேலும், “2029ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு, மூன்றில் ஒரு பங்கு பதவிகளில் மகளிர் இருப்பார்கள். இது அவர்களுக்கான உரிய அங்கீகாரமாக இருக்கும். இதற்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். பொய்யான கருத்துக்களைப் பரப்பக் கூடாது” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share