உலகம் முழுவதும் பணிபுரியும் தகவல் தொழில்நுட்ப (IT) ஊழியர்களுக்கு மிகவும் கவலைக்குரிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. முன்னணி ஐடி நிறுவனமான மைக்ரோசாப்ட் (Microsoft) மீண்டும் ஒரு பெரிய அளவிலான ஆட்குறைப்பு (Layoff) நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 2.5 சதவீதத்தினரை பணிநீக்கம் செய்யவுள்ளது. இது உலகம் முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்.
என்ன காரணம்?
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் நிறுவனம் பெருமளவில் முதலீடு செய்து வரும் வேளையில், இந்தக்கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விற்பனை, ஆலோசனை (consulting) மற்றும் கேமிங் (Xbox) பிரிவுகளில் உள்ளவர்களே இந்த ஆட்குறைப்பால் அதிகம் பாதிக்கப்பட உள்ளனர். தற்போது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சுமார் 2,20,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
குறையும் வேலைவாய்ப்புகள்:
‘ஜெனரேட்டிவ் ஏஐ’ (Generative AI) எனப்படும் உருவாக்கும் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது தொழில்நுட்பத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த புதிய தொழில்நுட்பம் மைக்ரோசாப்டின் பாரம்பரிய மென்பொருள் வணிகத்தை முற்றிலுமாக சீர்குலைக்கும் என்று முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர். இந்த கடும் அழுத்தத்தின் காரணமாக இந்நிறுவனம் தனது உத்தியை மாற்றி அமைத்து, AI உள்கட்டமைப்பில் அதிக முதலீடு செய்து வருகிறது.
செலவுகளைக் குறைக்க திட்டம்:
இந்த புதிய செலவினத்தைச் சமாளிக்க, நிறுவனம் தனது செலவுகளைக் குறைத்து வருகிறது. இந்த உத்தியின் ஒரு பகுதியாக, அமெரிக்க ஊழியர்களுக்காக விருப்ப ஓய்வுத் திட்டத்தையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வயது மற்றும் மொத்தப் பணி அனுபவத்தின் கூட்டுத்தொகை 70க்கு மேல் உள்ள ஊழியர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படுகிறது.
பங்குச் சந்தையின் சரிவு:
மைக்ரோசாப்டைப் பொறுத்தவரை இது பல முனைகளிலும் சவாலான காலகட்டமாகும். கடந்த ஒரு மாதத்தில் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 17% சரிந்துள்ளது. இந்தத் தீவிர சரிவு முதலீட்டாளர்களின் கவலையை அதிகரித்துள்ளது. நிறுவனங்கள் நிதி நெருக்கடியைச் சந்திக்கும் போதெல்லாம், ஊழியர்களே பெரும்பாலும் அதன் பாதிப்பைச் சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாக வேலையை இழப்பதன் மூலம் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தொழில்நுட்பத் துறையின் கசப்பான உண்மையாகும்.
