கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி: லெபனான் – இஸ்ரேல் ஒப்பந்தத்தின் விளைவு!

Published On:

| By Santhosh Raj Saravanan

Oil Price Fall and Hope returns with Israel Lebanon ceasefire

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் (Oil Price) குறைந்து வருகின்றன. இந்த ஒப்பந்தம் மெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் பெரும் போருக்கு ஒரு முடிவு வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதிபர் டொனால்ட் டிரம்பின் போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் நிறைவேற்றப்பட்டதும் சந்தைப் பதற்றங்களைத் தணித்துள்ளது.

வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் இரண்டு முக்கிய கச்சா எண்ணெய் குறியீடுகளும் சரிவுடன் வர்த்தகமாயின. பிரென்ட் கச்சா எண்ணெய் எதிர்கால விலை 67 சென்ட்கள், அதாவது 0.69% சரிந்து ஒரு பேரலுக்கு 97.14 டாலராக இருந்தது. அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெயும் 62 சென்ட்கள், அதாவது 0.65% சரிந்து, ஒரு பேரலுக்கு 95.40 டாலராக வர்த்தகமானது. 

ADVERTISEMENT

ஒரு நாள் முன்னதாக, புதன்கிழமையன்று குவைத் மீதான ஈரான் தாக்குதல்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே அமெரிக்க இராணுவத் தாக்குதல்கள் காரணமாக எண்ணெய் விலைகள் 2% அளவுக்கு பெருமளவில் உயர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்தை வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் ராஜதந்திர நிகழ்வுகளே ஆகும். ஈரானுக்கு எதிரான போரைத் தொடர்வதிலிருந்து அதிபர் டிரம்பைத் தடுக்கும் முயற்சியில் அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இருப்பினும், இந்தத் தீர்மானத்தை முழுமையாகச் செயல்படுத்த செனட் சபையின் ஒப்புதலும், டிரம்பின் சாத்தியமான வீட்டோ அதிகாரத்தை மீறுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையும் தேவைப்படும்.

ADVERTISEMENT

இவை அனைத்திற்கும் மத்தியில் ஈரானுடனான தற்போதைய பேச்சுவார்த்தைகளில் இந்த வார இறுதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படக்கூடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும், வாஷிங்டனுடனான (அமெரிக்கா) தொடர்புகள் துண்டிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். 

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share