ODI Worldcup: ஆதிக்கத்தை தொடரும் நியூசிலாந்து!

Published On:

| By Kavi

New Zealand vs Netherlands: 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், தனது 2ஆவது லீக் போட்டியில், நியூசிலாந்து அணி நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது.

ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

காயம் காரணமாக பாதிக்கப்பட்டு கேன் வில்லியம்சன், டிம் சவுதி மற்றும் லாக்கி பெர்குசன் ஆகிய நட்சத்திர வீரர்கள், இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடாத நிலையில், இந்த போட்டியில் லாக்கி பெர்குசன் மட்டும் அணிக்கு திரும்பினார்.

அடுத்தடுத்து அசத்திய நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள்

முதலில் பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணிக்கு, தேவன் கான்வே மற்றும் வில் யங் சிறப்பான துவக்கம் அளித்தனர். கான்வே 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வில் யங் அரைசதம் கடந்து 70 ரன்களுக்கு வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் இளம் நட்சத்திரம் ரச்சின் ரவீந்திராவும் அரைசதம் கடந்து அசத்தினார். ரச்சின் 51 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவருடன் ஜோடி போட்டு விளையாடிய டெரில் மிட்சல் 48 ரன்கள் குவித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இவர்களுக்கு பின் களமிறங்கிய அணியின் கேப்டன் டாம் லாதம், தனது பங்கிற்கு அரைசதம் விளாசி அசத்தினார். 8வதாக களமிறங்கிய மிட்சல் சான்ட்னர், பந்துகளை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டு 17 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார்.

சீரான இடைவேளைகளில் விக்கெட்களை பறிகொடுத்தாலும், அடுத்தடுத்து வந்தவர்களின் சிறப்பான ஆட்டத்தால், நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் சேர்த்தது. நெதர்லாந்து அணிக்காக, ஆர்யன் தத், வேன் மீகேரன் மற்றும் வேன் டெர் மேர்வி தலா 2 விக்கெட்களை கைப்பற்றியிருந்தனர்.

 

சான்ட்னர் சூழலில் சிக்கிய நெதர்லாந்து..

இதை தொடர்ந்து, 323 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணிக்கு, துவக்க ஆட்டக்காரர்கள் விக்ரம்ஜீத் சிங் 12 ரன்களுக்கும், மேக்ஸ் ஓடவ்ட் 16 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

அடுத்து களம்கண்ட காலின் அகர்மேன் பொறுப்பாக விளையாடி, நெதர்லாந்து அணிக்கு ரன்கள் சேர்த்தபோதும், மறுமுனையில் அவருக்கு தேவையான ஆதரவு கிடைக்கவில்லை. பாஸ் டி லீட் 18 ரன்களுக்கும், தேஜா நிடமனாரு 21 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, காலின் அகர்மேன் 69 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

பின் களமிறங்கிய கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் அதிரடியாக 30 ரன்கள் சேர்த்தபோதும், தொடர்ந்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேற, நெதர்லாந்து அணி 47வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்து 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், நியூசிலாந்து அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் தனது 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன்மூலம், 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

இந்த போட்டியில், நியூசிலாந்து அணிக்காக சிறப்பாக பந்துவீசிய மிட்சல் சான்ட்னர் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். மேலும், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தியதற்காக, அவர் ‘ஆட்ட நாயகன்’ விருதையும் வென்றார்.

முரளி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

இஸ்ரேல் போர் : பாலஸ்தீனத்துக்கு காங்கிரஸ் ஆதரவு!

“போய் ஆஸ்கர் கொண்டு வா” ரஜினியிடம் வாழ்த்து பெற்ற இயக்குனர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share