அதிமுக வழக்கு: புதிய நீதிபதி நியமனம்- பன்னீர் ரிலாக்ஸ்!

அரசியல்

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரிக்க புதிய நீதிபதி ஜெயச்சந்திரனை நியமித்து தலைமை நீதிபதி இன்று (ஆகஸ்ட் 5) உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றக் கோரியது தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து என்பவர் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு மனு அளித்திருந்தார். அதுபோல் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத்தும், தலைமை நீதிபதி முன்பு, இந்த வழக்கை வேறொரு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஒரு முறையீடாக வைத்தார்.

இதுதொடர்பாக தலைமை நீதிபதி, ‘அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை வேறு அமர்வுக்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை. எனினும் தொடர்புடைய நீதிபதிக்கு இந்த விஷயத்தை தெரிவித்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 4) பிற்பகல் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு, விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ‘நீதிபதியை மாற்ற வேண்டியது ஏன்’ என நீதிபதி கேள்வியெழுப்பினார்.

நீதிபதி கண்டனம்!
அதற்கு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது. இதற்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்திருந்தார். மேலும், ’நீதிபதி மீது நம்பிக்கை இல்லை என்று கூறிய வழக்குகளில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும்’ என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கூறினார்.

இதையடுத்து, மீண்டும் நேற்று (ஆகஸ்ட் 4) பிற்பகலில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்த கருத்துகள் குறித்து தலைமை நீதிபதியிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் முறையீடு செய்தார். அதில், “நீதிபதியை மாற்ற வேண்டுமென தங்களிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையில் நாளை (ஆகஸ்ட் 5) வழக்கை விசாரிப்பதாக நீதிபதி கூறியுள்ளார். இன்று (ஆகஸ்ட் 4) பிற்பகலிலும்கூட என் கட்சிக்காரரின் நடவடிக்கைகளை கீழ்த்தரமான நடவடிக்கை என விமர்சித்துள்ளார். நீதிபதியை மாற்றும் கோரிக்கையை கருத்தில்கொள்ள வேண்டும்” என கோரப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் மன்னிப்பு!
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 5) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ’தாங்களே வழக்கை நடத்துங்கள். நீதிபதியை மாற்றக்கோரிய விவகாரத்தில் நீதிபதிமீது எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை’ என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மன்னிப்பு கோரியது. அதேநேரத்தில், நீதிபதி கேட்டுக்கொண்டபடி மன்னிப்பு கோரியதை மனுவாக தாக்கல் செய்ய முடியாது என்றும் மறுத்தார் பன்னீர் தரப்பு வழக்கறிஞர்.

அதேசமயம், நீதிபதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக அளித்த மனுவை திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்” என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கூறியது. இதையடுத்து, இன்று (ஆகஸ்ட் 5) அதிமுக பொதுக்குழு வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைத்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரைத்தார். அதில், வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவதா, இல்லையா என தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்திருந்தார்.

புதிய நீதிபதி நியமனம்!
இந்த நிலையில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரையை ஏற்று, அதிமுக தொடர்பாக பன்னீசெல்வம் தொடர்ந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி உத்தரவிட்டுள்ளார். அவர், நாளை (ஆகஸ்ட் 6) முதல் இந்த வழக்கு விசாரணையை மேற்கொள்ள இருக்கிறார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 3 வாரங்களில் அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரித்து நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெ.பிரகாஷ்

முல்லைப் பெரியாறிலிருந்து தண்ணீர்: ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் கடிதம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.