வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் (NRIs) இந்திய வங்கிகளில் NRE (Non-Resident External) மற்றும் NRO (Non-Resident Ordinary) கணக்குகள் மூலம் ஃபிக்ஸ்ட் டெபாசிட் (FD) முதலீடு செய்வது வழக்கம்.
ஆனால் இந்த இரண்டு வகை டெபாசிட்டுகளுக்கும் வரி விதிப்பு ஒரே மாதிரி இல்லை. எந்தக் கணக்கில் முதலீடு செய்தால் வரிச் சலுகை கிடைக்கும், NRO கணக்கில் வரிச்சுமையை எப்படி குறைக்கலாம் என்பதைக் குறித்து தெரிந்துகொள்வது அவசியம்.
NRE மற்றும் NRO FD-க்கு என்ன வித்தியாசம்?
NRE கணக்கு என்பது வெளிநாட்டில் சம்பாதித்த வருமானத்தை இந்தியாவில் சேமிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கணக்கில் உள்ள ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு கிடைக்கும் வட்டி வருமானம் இந்தியாவில் முழுமையாக வரிவிலக்கு பெறுகிறது. மேலும், முதலீட்டுத் தொகையையும் வட்டியையும் முழுமையாக வெளிநாட்டிற்கு மாற்றிக்கொள்ள முடியும்.
NRO கணக்கு என்பது இந்தியாவில் கிடைக்கும் வருமானம் (வாடகை, ஓய்வூதியம், டிவிடெண்ட் போன்றவை) நிர்வகிக்க பயன்படுகிறது. இதில் கிடைக்கும் FD வட்டி வருமானம் இந்தியாவில் வரிக்குட்படும். வங்கிகள் பொதுவாக வட்டி வருமானத்தில் TDS பிடித்தம் செய்வதும் வழக்கமாகும்.
NRO FD-யில் வரியை எப்படி குறைக்கலாம்?
இந்தியா மற்றும் நீங்கள் வசிக்கும் நாட்டுக்கு இடையே Double Taxation Avoidance Agreement (DTAA) இருந்தால், அதன் பலனைப் பெறுவதன் மூலம் NRO FD-யில் பிடிக்கப்படும் TDS-ஐ குறைக்க முடியும். இதற்காக Tax Residency Certificate (TRC) உள்ளிட்ட தேவையான ஆவணங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், உங்கள் உண்மையான வரிப் பொறுப்பு, பிடித்தம் செய்யப்பட்ட TDS-ஐ விட குறைவாக இருந்தால், இந்தியாவில் வருமான வரி தாக்கல் (ITR) செய்து அதிகமாக பிடிக்கப்பட்ட தொகையை ரீஃபண்டாக பெறலாம்.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன?
வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை இந்தியாவில் பாதுகாப்பாக முதலீடு செய்து, வரிவிலக்கும் பெற விரும்புபவர்களுக்கு NRE FD சிறந்த தேர்வாக இருக்கும். இந்தியாவில் கிடைக்கும் வருமானத்தை முதலீடு செய்ய வேண்டியவர்கள் NRO FD-யைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
முதலீடு செய்வதற்கு முன் வட்டி விகிதங்கள், வரி விதிமுறைகள், DTAA சலுகைகள் மற்றும் பணத்தை வெளிநாட்டிற்கு மாற்றும் விதிமுறைகள் ஆகியவற்றை ஒப்பிட்டு முடிவு செய்வது நிதி ரீதியாக பயனளிக்கும்.
