சம்பளம் வந்த சில நாட்களிலேயே வங்கிக் கணக்கு காலியாகிவிடுகிறது என்று பலர் கவலைப்படுவதைப் பார்க்கலாம். மாத இறுதியில் அவசரச் செலவுகளை சமாளிக்க முடியாமல் கடன் வாங்கும் நிலையும் ஏற்படுகிறது. இதுபோன்ற சூழலைத் தவிர்க்க, சம்பளத்தைத் திட்டமிட்டு நிர்வகிப்பது மிகவும் முக்கியம். சிறிய பழக்கவழக்கங்களை மாற்றினாலே தேவையற்ற செலவுகளைக் குறைத்து, நிதி ரீதியாக பாதுகாப்பாக இருக்க முடியும் என்று நிதி நிபுணர்கள் கூறுகின்றனர்.
சம்பளம் வந்தவுடன் முதலில் சேமியுங்கள்
பலர் மாத இறுதியில் எவ்வளவு பணம் மீதமிருக்கிறதோ அதைச் சேமிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் சரியான முறை, சம்பளம் வந்தவுடன் முதலில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்பிற்கோ அல்லது முதலீட்டிற்கோ ஒதுக்குவதுதான்.
இதற்காக SIP, அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்கள் அல்லது பிற நீண்டகால முதலீட்டு திட்டங்களில் Auto Debit வசதியைப் பயன்படுத்தலாம். சேமிப்பை முதலில் ஒதுக்கிவிட்டால், மீதமுள்ள பணத்தைத் திட்டமிட்டு செலவிடுவது எளிதாகும்.
அவசர கால நிதியை உருவாக்குங்கள்
எதிர்பாராத மருத்துவச் செலவுகள், வாகன பழுது அல்லது குடும்ப அவசரநிலைகள் போன்றவற்றை சமாளிக்க தனியாக Emergency Fund வைத்திருப்பது அவசியம்.
ஒவ்வொரு மாதமும் சிறிய தொகையை தனி வங்கிக் கணக்கில் சேமித்து வந்தால், அவசர நேரங்களில் கடன் வாங்க வேண்டிய அவசியம் குறையும். நிதி நிபுணர்கள் குறைந்தபட்சம் 3 முதல் 6 மாத அத்தியாவசிய செலவுகளுக்கு இணையான தொகையை அவசர கால நிதியாக வைத்திருக்க பரிந்துரைக்கின்றனர்.
தேவையற்ற செலவுகளையும் ஆடம்பரத்தையும் குறையுங்கள்
பயன்படுத்தாத OTT சந்தாக்கள், தேவையில்லாத ஜிம் உறுப்பினர் கட்டணம், அடிக்கடி ஆன்லைன் ஷாப்பிங் போன்ற சிறிய செலவுகளே மாத இறுதியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதேபோல், சம்பளம் உயர்ந்தவுடன் வாழ்க்கை முறையையும் அதே வேகத்தில் உயர்த்த வேண்டிய அவசியமில்லை. கூடுதல் வருமானத்தை ஆடம்பரச் செலவுகளுக்குப் பயன்படுத்தாமல், சேமிப்பு மற்றும் முதலீட்டை அதிகரிப்பது நீண்டகால நிதி பாதுகாப்பை வழங்கும்.
முதலீட்டை அடிக்கடி மாற்ற வேண்டாம்
பங்குச்சந்தை அல்லது மியூச்சுவல் ஃபண்ட் ஏற்ற இறக்கங்களைப் பார்த்து அடிக்கடி முதலீட்டை மாற்றுவது நல்ல உத்தி அல்ல. அதற்குப் பதிலாக, வருடத்திற்கு ஒருமுறை உங்கள் முதலீடுகளை ஆய்வு செய்து, இலக்குகளுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்தால் போதுமானது.
தொடர்ச்சியான சேமிப்பு, செலவுக் கட்டுப்பாடு மற்றும் நீண்டகால முதலீட்டு ஒழுக்கம் ஆகிய மூன்றையும் பின்பற்றினால், மாதக் கடைசி பணத்தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதோடு, எதிர்கால நிதி இலக்குகளையும் எளிதாக அடைய முடியும்.
