கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள தனது 2 சதவீத பங்குகளை விற்பனைக்கான சலுகை (OFS) மூலம் மத்திய அரசு விற்க உள்ளது. இந்த விற்பனை மே 27 முதல் முதல் தொடங்க உள்ளது. கோல் இந்தியா நிறுவனத்தின் (Coal India Company) 2 சதவீத பங்குகள், அதாவது 12.32 கோடி பங்குகள் விற்கப்பட உள்ளன. இந்த விற்பனைக்கான விலையை ஒரு பங்குக்கு ரூ.412 என அரசு நிர்ணயித்துள்ளது. செவ்வாயன்று, பிஎஸ்இ-யில் கோல் இந்தியா பங்குகள் 458.25 ரூபாயில் வர்த்தகம் நிறைவடைந்தது. இது திங்கட்கிழமை விலையை விட 0.25 சதவீதம் அதிகமாகும்.
விற்பனைக்கான சலுகையின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விலையான ரூ.412, தற்போதைய சந்தை விலையை விட 10 சதவீதம் குறைவாகும். இதன் மூலம் முதலீட்டாளர்கள் கோல் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை 10 சதவீத தள்ளுபடியில் வாங்குவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பைப் பெறுவார்கள். கோல் இந்தியா நிறுவனத்தின் 2 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் அரசு கருவூலத்திற்கு சுமார் ரூ.5,000 கோடி கிடைக்கும். சில்லறை அல்லாத முதலீட்டாளர்களுக்கு மே 27 அன்றும், சில்லறை முதலீட்டாளர்களுக்கு மே 29 அன்றும் இந்த விற்பனை வாய்ப்பு திறக்கப்படும்.
இதுகுறித்து முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையின் (DIPAM) செயலாளர் அருனிஷ் சாவ்லா, “கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பங்குகளை விற்பனை செய்வதற்கான வாய்ப்பை இந்திய அரசு அறிவிக்கிறது. இதன் அடிப்படை விற்பனை, நிறுவனத்தின் 1 சதவீதப் பங்குகளாகும். இதில் ‘கிரீன் ஷூ’ விருப்பமும் உள்ளது. அதாவது, தேவைக்கு அதிகமாகப் பங்குகள் வாங்கப்பட்டால் கூடுதலாக 1 சதவீதப் பங்குகளை வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது” என்று கூறியுள்ளார்.
கோல் இந்தியா நிறுவனம் வலுவான செயல்பாட்டு மற்றும் நிதி செயல்திறன், நிலையான லாபம் மற்றும் கவர்ச்சிகரமான ஈவுத்தொகைகளுடன் ஒரு கவர்ச்சிகரமான நீண்ட கால முதலீட்டு வாய்ப்பை வழங்குகிறது என்று அருனிஷ் சாவ்லா கூறினார். கோல் இந்தியாவின் இந்த விற்பனை வாய்ப்பு நடப்பு நிதியாண்டில் ஒரு பொதுத்துறை நிறுவனம் மேற்கொள்ளும் இரண்டாவது விற்பனை வாய்ப்பாகும்.
கடந்த வாரம், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 8.08 சதவீதப் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் விற்பனை வாய்ப்பு வழியாக அரசு ரூ.2,266 கோடியைத் திரட்டியது. 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் முதலீடுகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் சொத்துக்களைப் பணமாக்குதல் மூலம் ரூ.80,000 கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, 2025-26 நிதியாண்டிற்காகத் திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.33,837 கோடியை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும்.
