கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டும் திட்டத்திற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்ற மறுத்துவிட்டது.
கர்நாடாகவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே நீண்ட வருடங்களாக காவிரி நதி நீர் பிரச்சினை இருந்து வருகிறது. தமிழகத்துக்கு கர்நாடகா உரிய தண்ணீர் திறந்துவிடுவதில்லை. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தசூழலில் காவிரி நீர் பாயும் மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட திட்டமிட்டு அதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய நீர்வள ஆணையத்தின் ஒப்புதலை கேட்டது கர்நாடகா. இதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் தமிழக அரசு மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பதற்காக மத்திய நீர் ஆணையம் (CWC) பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று (நவம்பர் 13) தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் வினோத் சந்திரன் மற்றும் என்.வி.அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ‘மேகதாது அணை கட்டினால் அது தமிழக விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். கர்நாடகா திட்டமிட்டுள்ள இந்த நீர்த்தேக்கத்தின் உயரம், தமிழ்நாட்டிற்கு நீர் வழங்கும் பிலிகுண்டுலு அணையை விட அதிகமாகும். இதன் காரணமாக, கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டிற்குத் தேவையான நீர் வரத்து கடுமையாகப் பாதிக்கப்படும். மொத்தமாக, இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டு விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும்’ என்று வாதம் முன்வைத்தார்.
கர்நாடக மாநிலத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் ஆஜராகி, ‘தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு, ஒரு ‘தவறான நோக்கம் கொண்டது’. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, கர்நாடகா மாநிலம் 177.25 ஆயிரம் மில்லியன் கன அடி நீரைத் தமிழ்நாட்டிற்கு வழங்க கட்டுப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிற்கான நீர் ஒதுக்கீட்டில் எந்தவித பாதிப்பும் ஏற்படாதபட்சத்தில், தேவையான அனுமதிகளைப் பெற்ற பின்னர், நீர்த்தேக்கத் திட்டத்தைத் தொடர கர்நாடகாவுக்கு உரிமை உண்டு. அணை கட்டப்பட்டாலும், தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நீரின் அளவை கர்நாடகா உறுதி செய்யும். எனவே தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று வாதாடினார்.
இரு மாநில வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “தமிழ்நாடு அரசின் மனு ப்ரீ மெச்சூர்… அதாவது ஆரம்பக்கட்டமானது என கூறி தள்ளுபடி செய்தனர்.
மேலும், மத்திய நீர்வள ஆணையத்தின் உத்தரவு என்பது மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு மட்டுமே. இந்த அறிக்கை தமிழகம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு போன்ற நிபுணர் குழுக்களின் கருத்துகள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே அங்கீகரிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
தொடர்ந்து உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை வழங்கவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்பதை கர்நாடகாவுக்கு தெளிவுபடுத்துகிறோம் என்றும் மேகதாது தொடர்பாக தற்போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்படுகின்றன எனவும் தலைமை நீதிபதி அமர்வு கூறியது.
